வேலூர் மேல்மொணவூரில் ஆசிரியர்கள் வராததால் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்


வேலூர் மேல்மொணவூரில் ஆசிரியர்கள் வராததால் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்
x
தினத்தந்தி 28 Jan 2019 9:30 PM GMT (Updated: 28 Jan 2019 9:57 PM GMT)

வேலூர் மேல்மொணவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர், 

வேலூர் மேல்மொணவூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு மேல்மொணவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமையாசிரியர் மற்றும் 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

கடந்த 22-ந் தேதி முதல் ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் காரணமாக இப்பள்ளியில் பணிபுரியும் 2 ஆசிரியர்களே பணிக்கு வந்துள்ளனர். அவர்கள் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் நேற்று பள்ளி திறக்கப்பட்டது. வழக்கம்போல் மாணவர்கள் பள்ளிக்கு பெற்றோருடன் வந்தனர். நேற்றும் 2 ஆசிரியர்களே பணிக்கு வந்திருந்தனர். அதனால் ஏமாற்றம் அடைந்த பெற்றோர், ‘பள்ளிக்கு அனைத்து ஆசிரியர்களும் வராததால் தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது’ என்று கூறி திடீரென பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தற்காலிக ஆசிரியர்களை உடனடியாக நியமித்து மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அதிகாரிகள், உடனடியாக அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்த ஒருவரையும் தற்காலிக ஆசிரியர்களாக அப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story