அரசு ஊழியர்களுடன் பேசி சுமுக தீர்வு காண வேண்டும் - தங்கதமிழ்செல்வன் பேட்டி


அரசு ஊழியர்களுடன் பேசி சுமுக தீர்வு காண வேண்டும் - தங்கதமிழ்செல்வன் பேட்டி
x
தினத்தந்தி 28 Jan 2019 9:59 PM GMT (Updated: 28 Jan 2019 9:59 PM GMT)

அரசு ஊழியர்களுடன் முதல்-அமைச்சர் பேசி சுமுக தீர்வு காண வேண்டும் என்று அ.ம.மு.க. கொள்கைபரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கூறினார்.

கடமலைக்குண்டு,

ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட மலைக்கிராமங்களில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மக்களை வனத்துறையினர் வெளியேற்ற முடிவு செய்துள்ளனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அ.ம.மு.க. கொள்கைபரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் மலைக்கிராம மக்களை சந்தித்து கருத்து கேட்கும் கூட்டம் அரசரடி கிராமத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசரடி, பொம்மராஜபுரம், இந்திராநகர், காந்திகிராமம் போன்ற கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்கள் தரப்பு கருத்துக்களை தெரிவித்தனர்.

இதனையடுத்து மலைக்கிராமங்களில் இருந்து மக்களை வெளியேற்றும் அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது. கூட்ட முடிவில் தங்கதமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அ.தி.மு.க.வில் இணைய தூதுவிடுவதாக வைகைசெல்வன் கூறிய குற்றச்சாட்டு பொய்யாகும். எம்.எல்.ஏ.வாக இருக்கும் போதே நாங்கள் செல்லவில்லை. தற்போது பதவியை பறித்துவிட்ட பின்னர் நாங்கள் அ.தி.மு.க.விற்கு செல்வதால் எங்களுக்கு என்ன பலன். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி பெறபோகிறது. அதன்பின்னர் அ.தி.மு.க. மற்றும் இரட்டை இலை எங்கள் பக்கம்தான் வரப்போகிறது. அதற்காக தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கி போராடி வருகிறோம்.

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய சக்தியாகும். அவர்களிடம் அடக்குமுறையை கையாண்டால் அரசே ஸ்தம்பித்து போகும். அவர்கள் கேட்கும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். ஜெயலலிதா வழியில் ஆட்சி செய்வதாக கூறும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு ஊழியர்களிடம் பேசி சுமுக முடிவை எட்ட முன்வரவேண்டும்.

இவ்வாறு தங்கதமிழ்செல்வன் கூறினார்.

இந்த கூட்டத்தில் அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் வி.எஸ்.தர்மராஜ், ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், கடமலை-மயிலை ஒன்றிய நிர்வாகிகள் சிக்கந்தர், பரமேஸ்வரன், பரமன், வீரணன், பவுன்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story