மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கு கடன் வழங்க சிறப்பு முகாம்கள்
தேனி மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கு கடன் வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேனி,
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தை சேர்ந்த சிறுபான்மையினர்களுக்கு கடன் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2017-18-ம் ஆண்டில் இக்கழகத்தின் கடன் திட்டங்களின் கீழ் 6 ஆயிரத்து 847 பேருக்கு ரூ.34 கோடியே 65 லட்சம் கடன் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு ரூ.100 கோடி அளவில் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சிறுபான்மையினர்களுக்கு தனி நபர் கடன் திட்டம், சுயஉதவிக்குழுக்களுக்கு சிறுதொழில் கடன் திட்டம், கல்விக்கடன் திட்டம், கறவை மாடு கடனுதவி திட்டம், ஆட்டோ கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டங்களின் கீழ் கடன் உதவி வழங்குவதற்கான சிறப்பு முகாம் உத்தமபாளையம், போடி, ஆண்டிப்பட்டி ஆகிய தாலுகாக்களில் நடத்தப்பட உள்ளது.
உத்தமபாளையத்தில் வருகிற 6-ந்தேதியும், போடியில் 14-ந்தேதியும், ஆண்டிப்பட்டியில் 19-ந்தேதியும் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. எனவே, தேனி மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையின மக்கள் இந்த சிறப்பு முகாம்களில் பங்கேற்று கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் தாங்கள் சார்ந்த மதத்துக்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த திட்ட அறிக்கை, வாகனக் கடன் பெறுவதாக இருந்தால் ஓட்டுனர் உரிமம் மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச்சான்றிதழ், கல்விக்கட்டணம் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். எனவே, இந்த முகாம்களை சிறுபான்மையின மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story