போரூரில், அடுக்குமாடி குடியிருப்பின் இரும்பு கதவு விழுந்ததில் பள்ளி சிறுவன் தலை நசுங்கி பலி
போரூரில் வீட்டின் அருகே அடுக்குமாடி குடியிருப்பின் இரும்புக்கதவு மேலே விழுந்ததில் சிறுவன் தலை நசுங்கி பலியானான்.
பூந்தமல்லி,
போரூர், கணேஷ் அவென்யூ, 8-வது தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 38), கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி லட்சுமி இவர்களுக்கு விஷால் (6), என்ற மகன் இருந்தான். இவன் முகலிவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக ஆசிரியர்கள் வராததால் நேற்று சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் இருந்தான்.
இந்நிலையில், அவன் வீட்டின் அருகே உள்ள புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் அருகே விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது, அந்த கட்டிடத்தின் முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு கதவை பிடித்து விளையாடிக் கொண்டு இருந்தான்.
தலை நசுங்கியது
அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த இரும்புக்கதவு சிறுவன் விஷால் மீது விழுந்ததில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான். இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போரூர் இன்ஸ்பெக்டர் சங்கர் நாராயணன் தலைமையில் வந்த போலீசார் இறந்து போன சிறுவன் விசாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அந்த கட்டிடத்தின் கட்டுமான என்ஜினீயரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். அந்த கட்டிடத்தின் முன் இருந்த இரும்பு கதவு சரியான முறையில் அமைக்கப்படாத காரணமாக தான் இந்த விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story