விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கு, மின்வாரிய அலுவலருக்கு 5 ஆண்டு சிறை
விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள ராதாபுரம் கருமாரபேட்டை பகுதியை சேர்ந்தவர் வீராசாமி (வயது 50). இவருக்கு சொந்தமாக அதே கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு இலவச மின் இணைப்பு கேட்டு கடந்த 2008-ம் ஆண்டு வீராசாமி, மதுரப்பாக்கத்தில் உள்ள இளமின் பொறியாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
அப்போது இந்த மனுவை விசாரித்த அப்போதைய உதவி மின் பொறியாளராக பணியாற்றி வந்த விழுப்புரம் பகுதியை சேர்ந்த திருஞானசம்பந்தம் (54) என்பவர், இலவச மின் இணைப்பு வழங்க வேண்டுமெனில் ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று வீராசாமியிடம் கூறினார்.
அதற்கு வீராசாமி, தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினார். அப்படியானால் ரூ.500 கொடுக்கும்படியும், பணத்தை கொடுத்தால் மட்டுமே இலவச மின் இணைப்பு வழங்க முடியும் என்றும் திருஞானசம்பந்தம் கறாராக கூறினார்.
இதையடுத்து வீராசாமி, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் கூறிய அறிவுரைப்படி கடந்த 7.11.2008 அன்று வீராசாமி, ரசாயன பொடி தடவிய பணத்தை எடுத்துக்கொண்டு மதுரப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த உதவி பொறியாளர் திருஞானசம்பந்தத்திடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு ஏற்கனவே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விரைந்து சென்று திருஞானசம்பந்தத்தை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் துறை ரீதியாக திருஞானசம்பந்தம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். அதன் பின்னர் இந்த வழக்கு விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே திருஞானசம்பந்தம், பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் இந்த வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரியா, குற்றம் சாட்டப்பட்ட திருஞானசம்பந்தத்திற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் இந்த அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story