சிவகங்கையில் ஜாக்டோ–ஜியோ ஆர்ப்பாட்டம்
சிவகங்கையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிவகங்கை,
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோஅமைப்பின் சார்பில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும், இளைஞர்களின் வேலை வாய்ப்பை தட்டி பறிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22–ந் தேதி முதல் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, உயர்கல்வி துறை, நகர் நிர்வாக துறை, அங்கன்வாடி, சத்துணவு, தலைமை செயலகம் உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் வரை ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று மறியல் போராட்டத்திற்கு பதிலாக ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மீனாட்சிசுந்தரம், ஜெய்சங்கர், டேவிட், சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரவிச்சந்திரன், இளங்கோவன் நாகேந்திரன், ஜோசப் சேவியர், முத்துபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.