கிராமங்களில் குடிநீர் திட்டப்பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் அமைச்சர் பாஸ்கரன் பேச்சு


கிராமங்களில் குடிநீர் திட்டப்பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் அமைச்சர் பாஸ்கரன் பேச்சு
x
தினத்தந்தி 30 Jan 2019 4:30 AM IST (Updated: 30 Jan 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

கிராமங்களில் குடிநீர் திட்டப்பணிக்கும், தெருவிளக்கு மற்றும் சாலை அமைத்தல் பணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.

சிவகங்கை,

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் முடிகண்டம் ஊராட்சி மீனாட்சிபுரம் கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தையும், பில்லூர் ஊராட்சி கரும்பாவூர் கிராமத்தில் ரூ.3.92 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையையும், வாணியங்குடி ஊராட்சியில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அம்மா உடற்பயிற்சிக்கூடம் மற்றும் அம்மா பூங்கா.

சக்கந்தி ஊராட்சி, புதுப்பட்டி கிராமத்தில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடிமையக் கட்டிடத்தையும், இடையமேலூர் ஊராட்சியில் ரூ.9.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நூலகக் கட்டிடத்தையும், பெருங்குடி ஊராட்சி, கிங்கினிப்பட்டி கிராமத்தில் ரூ.4.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நாடக மேடை கட்டிடத்தையும், அரசனூர், குமாரப்பட்டி ஊராட்சிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் தலா ரூ.8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்குகள் ஆகியவற்றின் திறப்பு விழா கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடந்தது.

இவைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்து பேசியதாவது:– கிராமப்புறங்கள் முழுமையாக வளர்ச்சி பெறவேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம். அதிலும் அரசின் திட்டங்கள் கடைக்கோடி பகுதி வரை முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் கிராமங்கள் தோறும் சென்று பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறோம். அந்த வகையில் சிவகங்கை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

கிராமங்களில் அடிப்படை வசதிகளை குடிநீர் திட்டப்பணிக்கும், தெருவிளக்கு மற்றும் சாலை அமைத்தல் பணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தப்படும். மேலும், பெண்கள் குழு அமைத்து சிறுதொழில் தொடங்க முன்வர வேண்டும். வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் தனிநபர் திட்டத்தில் ஒவ்வொருவருக்கும் கறவைமாடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை கிராம மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இந்த பகுதி விவசாய பூமி. மழை பொய்த்த காரணத்தால் குறைந்த அளவு தண்ணீரை வைத்து சிறந்த விவசாயம் செய்ய வேளாண்மைத்துறையில் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு வழங்கிய பல்வேறு திட்டங்களை நல்லமுறையில் பயன்படுத்தி பொருளாதார முன்னேற்றம் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், கூட்டுறவு வங்கித் தலைவர் சந்திரன், தாசில்தார் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், ரஞ்சனிதேவி, கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் கருணாகரன், சசிக்குமார், பாண்டி, பலராமன், ஜெயப்பிரகாஷ், சேவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்


Next Story