புயலால் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகை


புயலால் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 30 Jan 2019 4:30 AM IST (Updated: 30 Jan 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தை காமேஸ்வரம் மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மீனவர்கள் தங்களது ஆதார் அட்டையை போலீசாரிடம் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம்,

கஜா புயலால் நாகை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் தென்னை, மா, முந்திரி, சவுக்கு உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும், விசைப்படகு, பைபர் படகு, கட்டுமரங்கள் மற்றும் மீன்பிடி வலைகள் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்தன.

இந்த நிலையில் நாகை காமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள், புயல் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்தும், உடனே நிவாரணம் வழங்கக்கோரியும் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை கலெக்டரிடம் ஒப்படைப்பதற்காக நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் மீனவர்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, காமேஸ்வரம் மீனவ கிராமத்தில் கஜா புயலில் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் சேதமடைந்தன. அரசு அறிவித்துள்ள ரூ.1½ லட்சம் நிவாரண தொகை தற்போது வரை வங்கி கணக்கில் செலுத்தவில்லை. எனவே, நிவாரண தொகையை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

முன்னதாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் போலீசார், மீனவர்களை கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்லாமல் இருக்க நுழைவு வாயிலில் இரும்பு தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மீனவர்களை கலெக்டர் அலுவலகத்திற்குள் போலீசார் நுழைய விடாமல் தடுத்ததால் தங்களுடைய ஆதார் அட்டை, வாக்காளர், குடும்ப அட்டைகளை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் ஒப்படைத்து விட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story