கே.வி.குப்பம் அருகே காளை விடும் விழாவில் மாடு முட்டி கல்லூரி மாணவர் பலி


கே.வி.குப்பம் அருகே காளை விடும் விழாவில் மாடு முட்டி கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 30 Jan 2019 4:30 AM IST (Updated: 30 Jan 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

கே.வி.குப்பம் அருகே காளை விடும் விழாவில் மாடு முட்டியதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

குடியாத்தம்,

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாயில் கிராமத்தில் காளை விடும் விழா நடைபெற்றது. இதில் கே.வி.குப்பம், குடியாத்தம், பரதராமி, ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. காளை விடும் வீதியின் இருபக்கமும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன. விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்து அனுமதித்தனர். அதைத் தொடர்ந்து காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.

போட்டியில் கலந்துகொண்ட காளை ஒன்று அருகே உள்ள நிலத்தின் வழியாக ஓடி சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த காளை நிலத்தில் இருந்த தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்தது. இதனைக்கண்ட இளைஞர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் குடியாத்தம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் சுமார் 1 மணி நேரம் போராடி கிணற்றில் இருந்து காளையை உயிருடன் மீட்டனர்.

கிணற்றுக்குள் விழுந்ததில் காளையின் கால் முறிந்தது. உடனடியாக மீட்கப்பட்ட காளைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக வேலூர் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த காளை விடும் திருவிழாவில் மாடுகள் முட்டியதில் 25-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் பலத்த காயம் அடைந்த 8 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் குடியாத்தத்தை அடுத்த தாழையாத்தம் பஜனை கோவில் தெரு பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் தினேஷ்குமார் (வயது 20) என்பவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான தினேஷ்குமார் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

காளைவிடும் திருவிழாவில் உதவி கலெக்டர் மெகராஜ், காட்பாடி தாசில்தார் ஸ்ரீதர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, இன்ஸ்பெக்டர்கள் கவிதா, இருதயராஜ் உள்பட 25-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story