6-வது நாளாக வேலை நிறுத்தம், ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கடந்த 23, 24, 25, 28 ஆகிய 4 நாட்கள் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் 58 பேரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். வேலூர் மாவட்டத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் 64 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில், 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்குள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கிடையாது என்றும், பணிக்கு திரும்பாத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியாக அறிவிக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனாலும் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்று ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று காலை 10 மணி முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கலெக்டர் அலுவலகம் அருகே வரத்தொடங்கினர். அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபடலாம் என்ற முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
மதியம் 12 மணி அளவில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பலர் பேசினர். தொடர்ந்து கோரிக்கைளை வலியுறுத்தியும், கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை விடுவிக்கக்கோரியும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
‘எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து முதல்-அமைச்சர், ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அரசின் அச்சுறுத்தலுக்கு பயந்து சில ஆசிரியர்கள் வேண்டுமென்றால் பணிக்கு திரும்புவார்கள். எங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும்’ என்று ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story