பெண்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துகிறோம் நாராயணசாமி பெருமிதம்


பெண்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துகிறோம் நாராயணசாமி பெருமிதம்
x
தினத்தந்தி 30 Jan 2019 4:45 AM IST (Updated: 30 Jan 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

பெண்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

புதுச்சேரி,

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின்கீழ் நடுநிலை அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடந்தது. இதன் தொடக்க விழாவில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் யஷ்வந்தய்யா வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு கருத்தரங்கினை குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:–

பெண் குழந்தைகள் எந்த விதத்திலும் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல. வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டுகிறார்கள். நமது மாநிலத்தில் 1000 ஆண் வாக்காளர்களுக்கு 1,050 பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் உள்ளனர்.

பெண் குழந்தைகளுக்கு புதுச்சேரியில் பாதுகாப்பு உள்ளது. அவர்களது வளர்ச்சிக்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அவர்கள் வாழ்வில் முன்னேற வாய்ப்புகளை உருவாக்குகிறோம். நான் பல கல்லூரிகளின் பட்டமளிப்பு விழாக்களில் கலந்துகொண்டுள்ளேன். அங்கு முதலிடம் பெறுபவர்கள் பெண்களாகத்தான் உள்ளனர்.

வட மாநிலங்களில் பெண் சிசு கொலை அதிக அளவில் இருந்தது. அதேபோல் குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறுதல் போன்ற பழக்க வழக்கங்களும் இருந்தன. ஆனால் இப்போது படிப்படியாக அவை குறைக்கப்பட்டு அங்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு தரப்படுகிறது. இருந்தபோதிலும் பெண்களுக்கு தனிப்பட்ட சுதந்திரம் வட மாநிலங்களில் இல்லை. கணவனை தேடி வீட்டுக்கு வருபவர்களுக்கு வீட்டிற்குள் இருந்தபடிதான் பதில் சொல்லும் நிலை உள்ளது. இவை போன்ற பழைய மூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும்.

நிர்பயா போன்று பெண்கள் மீதான பலாத்காரங்களும் தடுக்கப்பட வேண்டும். புதுவையில் கடந்த 2½ வருடங்களாக பெண்களுக்கு நல்ல பாதுகாப்பினை வழங்கி உள்ளோம். அவர்கள் சுதந்திரமாக நடமாட நடவடிக்கை எடுத்துள்ளோம். புதுவையில் 23 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் பெண்களுக்கான பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் புதுவையில் நடத்தப்பட்டன. அதேபோல் கொம்யூன்தோறும் கிராம பகுதிகளிலும் போட்டிகளை நடத்த வேண்டும். 85 சதவீத பெண்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர். நமது மாநிலத்திலும் சில பிரச்சினைகள் உள்ளன. மத்திய அரசு போதிய நிதி தருவதில்லை. மாநிலத்திலும் நிறைய கோளாறுகள் உள்ளன. அவை விரைவில் சரிசெய்யப்படும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

நிகழ்ச்சியில் சமூக நலத்துறை செயலாளர் ஆலீஸ்வாஸ், மகளிர் நலப்பிரிவு துணை இயக்குனர் வரலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பாலின சமத்துவம் மற்றும் பாகுபாடு குறித்து அதேகாம் நிர்வாகி லலிதாம்பாள், பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் குறித்து அன்னமேரி தயாவதியும் பயிற்சி அளித்தனர்.


Next Story