அபிஷேகப்பாக்கத்தில் மீனவரை கொன்றதாக டிரைவர் கைது 2 ரூபாய் கடன் பாக்கி தகராறு கொலையில் முடிந்தது


அபிஷேகப்பாக்கத்தில் மீனவரை கொன்றதாக டிரைவர் கைது 2 ரூபாய் கடன் பாக்கி தகராறு கொலையில் முடிந்தது
x
தினத்தந்தி 30 Jan 2019 5:00 AM IST (Updated: 30 Jan 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

அபிஷேகப்பாக்கத்தில் மீனவரை கொன்றதாக டிரைவரை போலீசார் கைது செய்தனர். 2 ரூபாய் கடன் பாக்கி தகராறு கொலையில் போய் முடிந்தது.

பாகூர்,

புதுச்சேரி தவளக்குப்பத்தை அடுத்த தமிழக பகுதியான நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்த மீனவர் முத்தாள்ராயன் (வயது 46). நேற்று முன்தினம் அபிஷேகப்பாக்கத்தில் உள்ள ஒரு மதுக்கடைக்கு மதுகுடிக்க வந்தார். அப்போது முத்தாள்ராயனுக்கும், மதுபார் அருகே தள்ளு வண்டிக்கடையில் நின்றவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் முத்தாள்ராயன் செங்கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை குறித்து தவளக்குப்பம் போலீசார் விரைந்து சென்று முத்தாள் ராயனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.

இதில் அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் மணி என்பவர் தான் முத்தாள்ராயனை கொலை செய்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம், அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் புருஷோத்தமன், திருமுருகன் ஆகியோர் மணியிடம் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையின்போது போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

அபிஷேகப்பாக்கம் மதுக்கடை பார் அருகே எனது ஊரைச் சேர்ந்த பெண் தள்ளுவண்டிக் கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் முத்தாள்ராயன் தின்பண்டம் வாங்கியதில் 2 ரூபாய் கடன் பாக்கி வைத்திருந்தார். நேற்று முன்தினம் மாலை மதுபாரில் மதுகுடித்துவிட்டு தள்ளுவண்டி கடைக்கு வந்து மீண்டும் தின்பண்டம் கேட்டார். அவரிடம் அந்த பெண் 2 ரூபாய் கடனை தருமாறு கேட்டார். அப்போது முத்தாள் ராயனும், அவருடன் வந்த தரணி என்பவரும் அந்த பெண்ணிடம் தகராறு செய்தனர். எனது ஊரைச் சேர்ந்த பெண்ணிடம் தகராறு செய்ததால் நான் அவர்கள் 2 பேரையும் தட்டிக்கேட்டேன்.

உடனே அவர்கள் 2 பேரும் சேர்ந்து என்னிடம் தகராறு செய்து தாக்கினர். அதனால் பயந்துபோய் அங்கிருந்து ஓடியபோது அவர்கள் 2 பேரும் என்னை விரட்டிவந்து அங்கிருந்த செங்கல்லை எடுத்து என்னை தாக்கினார்கள்.

அதனால் ஆத்திரம் அடைந்த நான் அங்கு கிடந்த மற்றொரு செங்கல்லை எடுத்து முத்தாள்ராயனை திருப்பி தாக்கினேன். இதில் அவர் ரத்தக்காயம் அடைந்து கீழே விழுந்தார். அதனால் நான் பயந்துபோய் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன். பிறகுதான் அவர் இறந்துவிட்டது எனக்கு தெரிய வந்தது.

இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

Next Story