கர்நாடக வறட்சி நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.949½ கோடி நிதி போதாது மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பேட்டி


கர்நாடக வறட்சி நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.949½ கோடி நிதி போதாது மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பேட்டி
x
தினத்தந்தி 30 Jan 2019 5:30 AM IST (Updated: 30 Jan 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

வறட்சி நிவாரண பணிகளுக்காக கர்நாடகத்திற்கு ரூ.949½ கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியது. இந்த நிதி போதாது என்று வருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே கூறினார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் 156 தாலுகாக்களில் வறட்சி நிலவுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அந்த பகுதிகளில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. வறட்சி பாதித்த பகுதிகளில் மந்திரிகள் ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

வறட்சி நிவாரண பணிகளுக்கு ரூ.2,434 கோடி நிதி ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு, கர்நாடக அரசு கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக விவரமான மனுவை, கர்நாடக அரசு வழங்கியுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு நேற்று, வறட்சி பாதித்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை அறிவித்தது.

அதில் கர்நாடக வறட்சி நிவாரண பணிகளுக்கு ரூ.949½ கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் 156 தாலுகாக்கள் வறட்சி பகுதிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் ரூ.16 ஆயிரத்து 600 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இயற்கை பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2,434 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் நாங்கள் கோரிக்கை விடுத்தோம்.

ஆனால் வறட்சி நிவாரண பணிகளுக்கு ரூ.949½ கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த நிதி போதாது. கர்நாடகத்தில் தொடர்ந்து வறட்சி நிலவு வருகிறது. நிலைமை மிக மோசமாகிவிட்டது. அதனால் மத்திய அரசு வறட்சி நிவாரண நிதியை இன்னும் அதிகப்படுத்தி வழங்க வேண்டும்.

வறட்சி பகுதிகளில் குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு தீவனம் வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மக்கள் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு செல்வதை தடுக்க வேண்டும். இதன் அடிப்படையில் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தீவிரமான வறட்சி ஏற்பட்டுள்ளதால், மத்திய அரசு நிதி உதவியை அதிகமாக வழங்க வேண்டும்.

வறட்சி குறித்து புதிதாக ஒரு மனுவை தயாரித்து வருகிறோம். அதை மத்திய அரசுக்கு அனுப்புவோம்.” இவ்வாறு ஆர்.வி.தேஷ்பாண்டே கூறினார்.

Next Story