தமிழகத்தில் ஆட்சி, அதிகாரத்தை தக்க வைக்க பதவி சண்டை நடக்கிறது மு.க.ஸ்டாலின் பேச்சு


தமிழகத்தில் ஆட்சி, அதிகாரத்தை தக்க வைக்க பதவி சண்டை நடக்கிறது மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 30 Jan 2019 4:45 AM IST (Updated: 30 Jan 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

‘தமிழகத்தில் ஆட்சி, அதிகாரத்தை தக்க வைக்க பதவி சண்டை நடக்கிறது’ என்று பாப்பிரெட்டிப்பட்டி அருகே நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட மூக்கனூர் கிராமத்தில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இதுவரை நடத்தப்பட்ட ஊராட்சி சபை கூட்டங்களிலேயே இங்கு நடைபெற்ற கூட்டத்தில்தான் அதிகபட்சமாக 28 பெண்கள் பல்வேறு குறைகள், கோரிக்கைகளை கூறி உள்ளர்கள். உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரதிநிதிகள் இருந்திருந்தால் இந்த கோரிக்கைகளை ஓரளவிற்கு நிறைவேற்றி இருக்க முடியும். தமிழக முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்தபோது உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

சமத்துவபுர திட்டம், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மகளிர் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்த கூட்டத்தில் பேசிய பெண்கள், மகளிர் சுயஉதவிக்குழு குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. மகளிர் சுயஉதவிக்குழுக்களின் செயல்பாடு தற்போது தமிழகத்தில் எந்த அளவு முடங்கி போய் உள்ளது என்பதையே இது காட்டுகிறது.

முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் பயனடைந்த ஏராளமானோர் அதில் இருந்து விலக்கப்பட்டு பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அரசியல் நோக்கோடு இத்தகைய செயல் நடக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும்.

தமிழகத்தில் ஆட்சி, அதிகாரத்தை தக்க வைக்க பதவி சண்டை நடக்கிறது. இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுல்காந்தி வர வேண்டும் என்ற மனநிலை மக்களிடையே பரவலாக உள்ளது. சென்னையில் தி.மு.க. நடத்திய நிகழ்ச்சியில் இந்த கருத்தை நான் கூறினேன். கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி நடத்திய கூட்டத்தில் பங்கேற்றபோது அந்த கருத்தை நான் ஏன் சொல்லவில்லை? என்று பா.ஜனதா தமிழக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்புகிறார். சென்னையில் நடந்தது தி.மு.க. நிகழ்ச்சி என்பதால் அதில் நமது கருத்தை சொல்ல உரிமை உண்டு என்பதால் அங்கு ராகுல்காந்தி குறித்து பேசினேன்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் அனைத்து ஏழைகளுக்கும் குறைந்தபட்ச வருமானத்தை அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று ராகுல்காந்தி அறிவித்து உள்ளார். வறுமை ஒழிப்பில் இது ஒரு மைல் கல்லாக அமையும். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியவர் கருணாநிதி. அதுதொடர்பாக நடந்த போராட்டத்தின்போது உயிரிழந்த 23 பேரின் குடும்பத்திருக்கும் நிதியுதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் கருணாநிதி செய்தார். காய்கறி, கருவாடு வாங்கும்போது கூட நல்ல வாசனை, கெட்ட வாசனை என பார்த்து பார்த்து வாங்கும் பெண்கள், மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சியை தேர்வு செய்ய வேண்டும். மத்தியில் ஆளும் பா.ஜனதா ஆட்சியையும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதைத்தொடர்ந்து ஒடசல்பட்டியில் நடந்த பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

கட்சி வளர்ச்சி பணிகள், தேர்தல் பணிகளில் தலைமை பொறுப்பு மற்றும் மாவட்ட பொறுப்புகளில் இருப்பவர்கள் உத்தரவு போட்டாலும் அதை நிறைவேற்றும் இடத்தில் இருப்பவர்கள் வாக்குச்சாவடி முகவர்களே. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழக்கும் அளவிற்கு நமக்கு தோல்வி ஏற்பட்டது. அதுதொடர்பாக ஆய்வு செய்தபோது 25 தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் உள்ள ஒரு பூத்தில் நமக்கு 11 ஓட்டுகள் மட்டுமே கிடைத்திருப்பது தெரியவந்தது. இது இயக்கத்தை ஏமாற்றும் செயல். அடிமட்ட அளவில் இதை சரிசெய்ய வேண்டும் என்பதற்காகவே இடைத்தேர்தல் வர உள்ள தொகுதிகளில் வாக்குச்சாவடி முகவர்களை நேரில் சந்திக்கும் இந்த கூட்டத்தை நடத்தி வருகிறேன்.

இதுதொடர்பான பணிகளில் எனக்கு இப்போது 95 சதவீத மனதிருப்தி ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் 100 சதவீத இலக்கை அடைய வேண்டும். வாக்குச்சாவடி முகவர்களும் நேரடியாக என்னை அணுகி கருத்துகளை தெரிவிக்கும் நிலை இந்த இயக்கத்தில் உருவாகும். தமிழகத்தில் இப்போது நமக்கு சாதகமான நிலை உள்ளது.

மக்கள் தி.மு.க.விற்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். அந்த வாக்குகளை முழுமையாக வாக்குச்சாவடிக்கு கொண்டு வர நீங்கள் முழுமையாக பாடுபட வேண்டும். தமிழகத்தில் ‘கமிஷன்-கரப்சன்-கலெக்சன்’ ஆகியவற்றையே குறிக்கோளாக கொண்ட ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சிக்கு பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு முட்டு கொடுக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியையும், மத்தியில் பா.ஜனதா தலைமையிலான பாசிச ஆட்சியையும் அப்புறப்படுத்த நாம் முழுமுனைப்புடன் பாடுபட வேண்டும்.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறினார்.

Next Story