ஒட்டன்சத்திரம் பஸ்நிலையம் முன்பு பூக்கடையில் வாலிபர் வெட்டிக் கொலை
ஒட்டன்சத்திரம் பஸ்நிலையம் முன்பு பூக்கடையில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.
ஒட்டன்சத்திரம்,
ஒட்டன்சத்திரம் சிக்கந்தர்நகரை சேர்ந்தவர் சோனைமுத்து. இவருடைய மகன்கள் வாய்க்கால்துரை, கார்த்திக், இமானுவேல் என்ற ஜெயக்குமார் (வயது 19). இதில் கார்த்திக், ஒட்டன்சத்திரம் பஸ்நிலையம் முன்பு பூக்கடை வைத்துள்ளார். இந்த பூக்கடைக்கு ஜெயக்குமார் தினமும் வந்து செல்வார். மேலும் பூக்கடையில் தனது அண்ணன் கார்த்திக்குக்கு உதவி செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு வழக்கம் போல் ஜெயக்குமார், பூக்கடைக்கு வந்தார். அப்போது பூ வியாபாரம் செய்து கொண்டிருந்த கார்த்திக்கிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பூக்கடையின் முன்பு வேகமாக வந்து ஒரு மோட்டார்சைக்கிள் நின்றது. அதில் இருந்து 3 பேர் அரிவாள்களுடன் இறங்கினர்.
மேலும் பூக்கடையை நோக்கி வந்த 3 பேரும், ஜெயக்குமாரை சூழ்ந்து வெட்ட தொடங்கினர். இதை கண்ட பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆனால், ஜெயக்குமாரை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. இதை பயன்படுத்தி கொண்ட 3 பேரும் ஜெயக்குமாரை சரமாரியாக வெட்டி விட்டு மோட்டார்சைக்கிளில் தப்பிவிட்டனர்.
இதில் அவருக்கு தலை, கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டு விழுந்தது. இதனால் கீழே சாய்ந்த ஜெயக்குமார் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து ஜெயக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜெயக்குமாரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒட்டன்சத்திரம் பஸ்நிலையம் முன்பு மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நேரத்தில் நடந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story