தூத்துக்குடியில் பழிக்குப்பழியாக பயங்கரம்: தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொடூரக்கொலை 4 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது


தூத்துக்குடியில் பழிக்குப்பழியாக பயங்கரம்: தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொடூரக்கொலை 4 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது
x
தினத்தந்தி 30 Jan 2019 4:30 AM IST (Updated: 30 Jan 2019 4:14 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய குற்றவாளிகளை 4 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி விவேகானந்தர் நகரைச் சேர்ந்த பெரியசாமியின் மகன் பாலமுருகன் என்ற பாலு (வயது 28), கட்டிட தொழிலாளியான இவருக்கு கடந்த ஆண்டு இந்திரா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் பாலமுருகன் நேற்று மாலை 4 மணிக்கு தனது நண்பர் ஒருவருடன் தூத்துக்குடி பொன் சுப்பையாநகரில் நின்று பேசிக் கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் 3 பேரும், பாலமுருகனை சரமாரியாக தாக்கினர். இதில் தடுமாறிய அவர் கீழே விழுந்தார். எனினும் ஆத்திரம் அடங்காத அவர்கள் கீழே கிடந்த பெரிய கல்லை எடுத்து, பாலமுருகன் தலையில் போட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த கொடூர சம்பவம் நடந்து கொண்டு இருக்கும்போது பாலமுருகனின் நண்பர் அங்கு இருந்து தப்பிச் சென்று விட்டார்.

இதுகுறித்து உடனடியாக தாளமுத்துநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் பாலமுருகன் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடி பட்டுராஜ் (45) என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தில் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொலை வழக்கில் பாலமுருகன் 3-வது எதிரியாக சேர்க்கப்பட்டார். இதனால் பட்டுராஜ் கூட்டாளிகள் பழிக்குப்பழியாக பாலமுருகனை கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார், பாலமுருகனை கொலை செய்ததாக தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த மணி, தாளமுத்துநகர் நேரு காலனியை ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி பொன்னகரத்தை சேர்ந்த ஜெயராமபாண்டியன் என்ற மோகன் ராஜ் ஆகியோரை இரவு 8 மணிக்கு கைது செய்தனர். அதாவது கொலை நடந்த 4 மணி நேரத்தில் போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பட்டுராஜ் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலையை செய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story