திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நேற்று நடந்தது.
தூத்துக்குடி,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் வீரப்பன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா வருகிற 10-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கோவில் மற்றும் திருச்செந்தூர் நகரம் முழுவதும் சுகாதாரமான முறையில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் உபயோகத்துக்கு நகரில் உள்ள ஆவுடையார்குளத்துக்கு தண்ணீர் திறந்துவிட பொதுப்பணித்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும். பக்தர்களுக்கு தேவையான கழிப்பறை வசதிகள் செய்ய வேண்டும். கோவில் வளாகம், குரும்பூர்-குரங்கன்தட்டு நீரேற்று நிலையம், திருச்செந்தூர் தெப்பக்குளம் நீரேற்றும் நிலையங்களுக்கு மின் வினியோகம் தங்கு தடையின்றி கிடைக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேரோட்டம் அன்று தேரோடும் பாதையில் மின்வினியோகத்தை துண்டிப்பு செய்து மின் பணியாளர்கள் தேருடன் வலம் வர வேண்டும். திருக்கோவில் வளாகத்தில் திருவிழா காலங்கள் முழுவதும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதியுடன், அவசர மருத்துவ சிகிச்சை பெறும் வசதியுடனும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அரசு போக்குவரத்து துறை மூலம் பல்வேறு வழித்தடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். மீன்வளத்துறையின் நீச்சல், கடலாள், முத்துக்குழி பணியாளர்களுடன் சேர்ந்து தீயணைப்பு துறையினர் கடலில் உயிர்மீட்பு பாதுகாப்பு வளையத்துடன் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். மாசித்திருவிழா சிறப்புடன் நடைபெற அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பரிதா ஷெரின், திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோவிந்தராசு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உதவி ஆணையர் செல்வராஜ், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மாகின் அபுபக்கர், பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் உமாசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story