தூத்துக்குடியில் சாலை மறியல்: ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 149 பேர் கைது தற்காலிக ஆசிரியர்கள் 49 பேர் நியமனம்
தூத்துக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 149 பேர் கைது செய்யப்பட்டனர். தற்காலிக ஆசிரியர்களாக 49 பேர் நியமனம் செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி,
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு(ஜாக்டோ- ஜியோ) சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வந்தது.
இந்த போராட்டம் காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால் மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டனர். பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. அதன்படி நேற்று முன்தினம் வரை 3 ஆயிரத்து 702 பேர் விண்ணப்பித்து உள்ளனர். நேற்றும் தொடர்ந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தது. அதன்படி நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 55 பேரை தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் கைது செய்தனர். அவர்களை தூத்துக்குடி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பிஸ்மிதா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர் 55 பேரையும் சொந்த ஜாமீனில் மாஜிஸ்திரேட்டு விடுவித்தார்.
இந்த நிலையில் நேற்று பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் 286 ஆசிரியர்கள் மட்டுமே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருந்தனர். இதனால் 49 தொடக்கப்பள்ளிகள் மட்டும் மூடப்பட்டு இருந்தன. இந்த பள்ளிக்கூடங்களுக்கு தலா ஒரு தற்காலிக ஆசிரியர் வீதம் 49 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதற்கிடையே நேற்று மதியம் கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி அரசு ஊழியர் சங்கம் முன்பு பாளையங்கோட்டை ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கலையரசன் தலைமை தாங்கினார். பின்னர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரளாக வந்து பாளையங்கோட்டை ரோட்டில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மறியல் போராட்டம் நடத்திய 61 பெண்கள் உள்பட 149 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story