நெல்லை பல்கலைக்கழக வளாகத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் மாணவர்கள் முள்ளங்கி அறுவடை செய்து விற்பனை
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் இயற்கை முறையில் விவசாயம் செய்து உள்ளனர். அவர்கள் முதல்முறையாக நேற்று முள்ளங்கியை அறுவடை செய்து விற்பனை செய்தனர்.
பேட்டை,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு தாவரவியல் துறை மாணவர்களுக்கு இயற்கை முறையில் வேளாண் பொருட்கள் உற்பத்தி செய்ய பல்கலைக்கழக வளாகத்தில் 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலத்தில் தற்போது மாணவர்கள் 20 சென்ட் நிலத்தில் முள்ளங்கி, தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய் மற்றும் 6 வகையான வாழைகளை பயிரிட்டு உள்ளனர். இந்த விவசாய பணியை மாணவர்கள் தினமும் செய்து வருகின்றனர். சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாலை நேரத்தில் பணி செய்கின்றனர். பயிர்களுக்கு மாட்டுச்சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்களையே மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது முள்ளங்கி விளைந்து அறுவடைக்கு தயாரானது. முதல்முறையாக நேற்று முள்ளங்கியை மாணவர்கள் அறுவடை செய்தனர். அவற்றை பேராசிரியர்களுக்கு விற்பனை செய்தனர். இந்த விற்பனையை பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உலக அளவில் ஐரோப்பிய நாடுகளில் தான் பல்கலைக்கழகங்களில் இயற்கை முறையில் வேளாண் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் முதல்முறையாக இங்கு தான் இயற்கை முறையில் வேளாண் பொருட்களை மாணவர்கள் உற்பத்தி செய்துள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்கள் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு விற்பனை செய்யப்படும். மேலும் மார்க்கெட் மற்றும் விற்பனைக்கூடங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
இங்கு மாணவர்களால் இயற்கை முறையில் விதைகள் உற்பத்தி செய்யப்படும். இயற்கை உரங்களை மட்டுமே பயிர்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பயிரிடப்பட்டுள்ள தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட பயிர்களின் அறுவடை முடிந்ததும், இங்கு மூலிகை செடிகளை வளர்த்து விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளோம். களிமண் நிலத்தில் உளுந்து, பாசிப்பயிறு போன்றவை பயிரிடப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தாவரவியல் துறை தலைவர் ரவிச்சந்திரன் கூறும்போது, ‘இந்த திட்டம் வெற்றி பெற்று உள்ளதால், மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்தவும், விவசாய பணிகளை விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.
பேட்டியின்போது பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு, நிதி அலுவலர் அர்ச்சுனன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story