காதல் கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
விருத்தாசலம் அருகே காதல் கணவருடன் சேர்த்து வைக்க கோரி, இளம் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விருத்தாசலம்,
சிதம்பரம் அடுத்த சாக்காங்குடியை சேர்ந்தவர் வீரபாண்டியன் மகள் சிலம்பொலி(வயது 25). இவரும் விருத்தாசலம் அடுத்த சின்னகண்டியங்குப்பத்தை சேர்ந்த சேகர் மகன் செல்லதுரை(28) என்பவரும் கடந்த மாதம் 12-ந்தேதி, பெற்றோருக்கு தெரியாமல், முதனை செம்புலிங்க அய்யனார் கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
அப்போது, தனது தாய் விஷம் குடித்து விட்டதாக கூறி சென்ற செல்லதுரை, சிலம்பொலியை தன்னுடன் அழைத்து செல்லவில்லை. தொடர்ந்து சிலம்புபொலியுடனும் பேசுவதை அவர் தவிர்த்து வந்தார். இதையடுத்து செல்லதுரை வீட்டின் முன்பு சிலம்பொலி தர்ணா போராட்டம் நடத்தி னார். இதில், விருத்தாசலம் மகளிர் போலீசார் இருதரப்பினரிடமும் விசாரித்தனர். பின்னர் கடந்த மாதம் 27-ந்தேதி தெற்கு பெரியார் நகரில் உள்ள ஒருகோவிலில் வைத்து செல்லதுரைக்கும், சிலம்பொலிக்கும் மீண்டும் திருமணம் நடந்தது. அப்போது, தன்னுடன் சேர்ந்து வாழ ஒரு மாதம் காத்திருக்குமாறு செல்லத்துரை சிலம்பொலியிடம் தெரிவித்தார். அதை ஏற்ற சிலம்பொலி தனது தாய் வீட்டில் இருந்து வந்த நிலையில், செல்லத்துரை அவரை அழைக்க வரவில்லை.
இதனால் ஏமாற்றம் அடைந்த சிலம்பொலி நேற்று தன்னுடைய காதல் கணவர் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீடு பூட்டி கிடந்தது. தொடர்ந்து அங்கு அமர்ந்து மீண்டும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சிலம்பொலி, திடீரென தான் கையில் எடுத்து வந்த விஷத்தை எடுத்து குடித்தார்.
இதில் மயங்கி விழுந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story