சேலம் மாவட்டத்தில் 28 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்


சேலம் மாவட்டத்தில் 28 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 30 Jan 2019 5:59 AM IST (Updated: 30 Jan 2019 5:59 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 28 ஆசிரியர்களை பணி இடைநீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி நடவடிக்கை எடுத்துள்ளார்.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 880 பெண்கள் உள்பட மொத்தம் 1,530 பேர் கைது செய்யப்பட்டு சேலம் கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள திருமண மண்டபங்களில் காவலில் வைக்கப்பட்டனர்.

பின்னர் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 47 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, கைது செய்யப்பட்டவர்களில் 28 ஆசிரியர்களை பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த உத்தரவு நகல் விரைவில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் வழங்கப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் கடந்த வாரம் நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 18 ஆசிரியர்கள் ஏற்கனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story