மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் முனைவோருக்கு வங்கி கடனுதவி பெற்றுத்தர நடவடிக்கை கலெக்டர் ராமன் பேச்சு


மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் முனைவோருக்கு வங்கி கடனுதவி பெற்றுத்தர நடவடிக்கை கலெக்டர் ராமன் பேச்சு
x
தினத்தந்தி 30 Jan 2019 11:00 PM GMT (Updated: 30 Jan 2019 4:37 PM GMT)

தொழில் முனைவோருக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் வங்கி கடனுதவி பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் ராமன் கூறினார்.

வேலூர், 

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தமிழ்நாடு மகளிர் நலமேம்பாட்டு நிறுவனம் சார்பில் தொழில் முனைவு உத்திகள் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான வடிவமைப்பு குறித்து 7 நாள் பயிற்சி வேலூர் ஏலகிரி அரங்கில் நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 40 பெண்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு தொழிற்பயிற்சி பயிற்றுனர்களால் வணிக மேம்பாட்டு சேவைகள் உள்பட பல்வேறு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

பயிற்சியின் நிறைவு விழா நடந்தது. விழாவுக்கு தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன மாநில ஒருங்கிணைப்பாளர் ரெக்ஸ் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் ராமன் கலந்துகொண்டு தொழில்முனைவோர் பயிற்சி முடித்த பெண்களுக்கு ‘ஆன்லைன்’ சான்றிதழ் வழங்கி பேசியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் மூலம் மகளிர் சுயஉதவி குழுக்கள் சிறப்பாக செயலாற்றி வருகிறது. பெண்களை புதிய தொழில் முனைவோராக உருவாக்கிட சேலம், கோவை மற்றும் வேலூர் மாவட்டங்களில் முன்னோடியாக விளங்கும் பெண்களுக்கு தொழில் முனைவோருக்கான பயிற்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வேலூர் மாவட்டத்தில் இப்பயிற்சி நடத்தப்பட்டு உள்ளது. இந்த பயிற்சியில் புதிய தொழில்முனைவோர்கள் தொழில் தொடங்கும் உத்திகளை அறிந்து கொள்ள பல்வேறு தொழில் செய்யும் இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

தொழில் முனைவோருக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் வங்கி கடனுதவி பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள்தான் வங்கிகளாக செயலாற்றுகின்றனர். தங்களிடம் கிடைக்கும் பணத்தில் சேமிப்பையும் செய்து குடும்பத்தையும் வழிநடத்துகின்றனர். புதிய தொழில்முனைவோருக்கு இப்பயிற்சி பயனுள்ளதாக அமையும். பயிற்சியில் கலந்து கொண்ட 40 பெண்களும் எதிர்காலத்தில் சிறந்த தொழில் முனைவோர்களாக உருவாகி சிறந்து விளங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில், மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் ரூபன், காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story