சாலை மறியலில் ஈடுபட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 15 பேர் கைது


சாலை மறியலில் ஈடுபட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 15 பேர் கைது
x
தினத்தந்தி 31 Jan 2019 4:15 AM IST (Updated: 30 Jan 2019 10:10 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர், 

வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாநில துணைத்தலைவர் கார்த்தீஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கோவலன், செயலாளர் பார்த்திபன், பொருளாளர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், தனியார் துறையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், படிப்புக்கேற்ற, தகுதிக்கேற்ற வேலை வழங்க வேண்டும், ரெயில்வே துறையில் ஊழியர்கள் ஓய்வுபெற்ற பின்னரும் வேலைக்கு அழைப்பதை கைவிட வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்ட துணைத்தலைவர்கள் கோட்டீஸ்வரன், சத்தியானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அக்கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை தபால் நிலையம் அருகே அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

சாலை மறியலில் ஈடுபட முயன்ற 3 பெண்கள் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 15 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story