கசிவுநீர் குட்டையை சீரமைக்க தோண்டிய 7 அடி பள்ளத்தில் திடீர் நீரூற்று பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு
கசிவுநீர் குட்டை அமைக்க பள்ளம் தோண்டியபோது 7 அடி ஆழத்திலேயே நீரூற்று வந்ததால் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
கண்ணமங்கலம்,
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள குப்பம் கிராமத்தில் தொலாங்காட்டு மலை அடிவாரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கசிவுநீர் குட்டை அமைக்கப்பட்டது. தற்போது இந்த கசிவுநீர் குட்டையை மீண்டும் ரூ.2 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் நேற்று காலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கசிவுநீர் குட்டை மேற்கு பகுதியில் சுமார் 7 அடி பள்ளம் தோண்டப்பட்டது.
அப்போது திடீரென்று நீரூற்று போல் தண்ணீர் வரத்து ஏற்பட்டது. உடனே 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை பார்க்கும் பெண்கள் இது நமது ஊர் கிராம தேவதை காளியம்மன் அருளால் தான் இந்த நீரூற்று ஏற்பட்டது என கூறி அதே பகுதியில் புதுபானையில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
மேலும் நீரூற்று ஏற்பட்ட இடத்தில் தண்ணீர் கலங்கலாக இருந்தாலும், சுவையாகவும் சுத்திகரிப்பு செய்த குடிநீர் போல் உள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பெண்கள் கூறுகையில், ‘தொலாங்காட்டு மலை அடிவாரத்தில் உள்ள கசிவுநீர் குட்டையை சீரமைக்க 7 அடி பள்ளம் தோண்டிய போது திடீர் நீரூற்று ஏற்பட்டது. மேலும் தண்ணீர் எடுக்க எடுக்க குறையாமல் வருகிறது. தற்போது குப்பம் ஊராட்சியில் வினியோகம் செய்யும் குடிநீர் உப்பு நீராக உள்ளது. எனவே, கசிவுநீர் குட்டை பகுதியில் ஆழ்துளை கிணறு அல்லது திறந்த வெளி கிணறு அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story