நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வரும் மத்திய, மாநில ஆட்சிகளை அகற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு


நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வரும் மத்திய, மாநில ஆட்சிகளை அகற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 31 Jan 2019 4:00 AM IST (Updated: 30 Jan 2019 11:42 PM IST)
t-max-icont-min-icon

‘நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வரும். அப்போது மத்திய, மாநில ஆட்சிகளை அகற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’ என்று ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி கிராமத்தில் நேற்று தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பெண்களிடம் குறைகள் மற்றும் அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டறிந்தார். இதையடுத்து கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மகாத்மா காந்தியின் நினைவு நாளான இன்று(நேற்று) இந்த கூட்டத்தை நடத்துவதில் நான் பெருமை அடைகிறேன். தமிழகத்தில் 12,617 கிராம ஊராட்சிகள் உள்ளன. கடந்த 3-ந் தேதி திருவாரூரில் கருணாநிதியின் தொகுதியில், நான் இந்த ஊராட்சி சபை கூட்டத்தை தொடங்கி வைத்தேன். அதைத்தொடர்ந்து எல்லா தொகுதிகளிலும் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.

கிராமத்தில் இருந்து தான் அரசியல் தொடங்குகிறது. கிராமங்கள் தான் அரசியலை நிர்ணயிக்கிறது. அந்த காலத்தில் குடவோலை முறை மூலம் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான ஆதாரங்கள் உத்திரமேரூர் கல்வெட்டிலும், கும்பகோணத்திலும் உள்ளன. இந்த முறையை வாக்குச்சீட்டாக மாற்றி, தற்போது மின்னணு வாக்கு எந்திரங்கள் மூலம் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

உள்ளூர் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளை நீங்கள் தேர்வு செய்கிறீர்கள். அவர்கள் கிராமத்திற்கு என்று ஒதுக்கப்படும் நிதியை பயன்படுத்தி உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றினர். தற்போது தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பும் இல்லை. ஆட்சியும் முறையாக நடக்கவில்லை. இதேபோல் மத்தியிலும் ஆட்சி எதுவும் முறையாக நடக்கவில்லை. இதனால் நாடு இன்றைக்கு குட்டிச்சுவராக, திசை மாறி போய்க்கொண்டு இருக்கிறது.

சமீபத்தில் நான் மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி நடத்திய கூட்டத்துக்கு சென்றேன். அங்கு வந்த அனைத்து தலைவர்களும் நீங்கள் எப்படி? இவ்வளவு சிறப்பாக ஊராட்சி சபை கூட்டத்தை நடத்துகிறீர்கள் என்றனர். இது எனக்கு பெருமையாக இருந்தது.

தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க. ஆட்சி கோமா நிலையில் உள்ளது. ‘கரப்சன், கமிஷன், கலெக்சன்’ இதுதான் அவர்களுடைய லட்சியம், கொள்கை ஆகும். கொலைக்கார ஆட்சி என்று சொல்வதில் இந்தியாவிலே, ஏன் உலகத்திலே முதலிடம் என்றால் அது தமிழகம் தான். ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

அந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக ஜெயலலிதா அறிவித்துவிட்டு சென்றார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடந்தபோது, அதில் கலந்துகொண்ட அத்தனை பேரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ஆனால் ஜெயலலிதா இறந்தபிறகு இதே பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக பதவியேற்ற போது யாரும் அழவில்லை.

ஜெயலலிதா வாழ்ந்த கோடநாடு வீட்டில் 5 கொலைகள் நடந்துள்ளது. இப்போது உள்ளவர்கள் செய்த தவறுகள் அனைத்தும் வீடியோ எடுத்து அதை பென்டிரைவ்-ல் பதிவு செய்து ஜெயலலிதா வைத்து இருந்தார். சி.பி.ஐ. சோதனையின் போது இது சிக்கினால் மானம், மரியாதை போய்விடும் என்பதாலும் சிறைக்கு செல்லக்கூடிய சூழ்நிலை வந்து விடும் என்பதாலும் பயந்துகொண்டு ஆட்களை நியமித்து கோடநாட்டில் உள்ள ஆவணங்கள், பணத்தை எடுத்து வர திட்டமிட்டனர்.

இதற்காக அவர்கள் கனகராஜ் என்ற டிரைவரை பயன்படுத்தினார்கள். இதையடுத்து அவர் ஒரு கூலிப்படையை நியமிக்கிறார். அந்த கூலிப்படை கோடநாட்டில் நுழைந்து காவலாளியை அடித்து கொன்றுவிட்டு அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் பணத்தை எடுத்து சென்று விட்டார்கள். அவர்கள் தாக்கியதில் காவலாளி இறந்து விட்டதால், இது கொலை வழக்காகி பிரச்சினையாகி விடும் என்பதால், அடுத்ததாக இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கொல்ல திட்டமிட்டனர்.

கூலிப்படையை சேர்ந்த சயனை கொன்று விட்டால் விஷயம் வெளியே தெரியாது என்பதற்காக அவனை கொல்ல முயற்சி நடக்கிறது. லாரியை கொண்டு அவர் சென்ற கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினர். இதில் சயனின் குடும்பத்தினர் விபத்தில் பலியாகினர். இந்த நிலையில் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், சயனை பிடித்து விசாரித்து கோடநாட்டில் என்னென்ன நடந்தது என்பதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக தற்போது கோர்ட்டுக்கு சென்று வருகிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபை தேர்தலும் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே மத்தியிலும், மாநிலத்திலும் தற்போது உள்ள ஆட்சியை அகற்ற அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி செய்த முறைகேடுகள் குறித்த விசாரணையை தற்போது கோர்ட்டு தொடங்கி உள்ளது. எனவே அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்த கூட்டத்தில் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தேர்தல் பணிக்குழு செயலாளர்கள் செல்வகணபதி, எஸ்.ஆர்.பார்த்திபன், தீர்மானக்குழு உறுப்பினர் தாமரைக்கண்ணன், ஓமலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமரன், வடக்கு ஒன்றிய செயலாளர் குப்புசாமி, காடையாம்பட்டி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அறிவழகன், மாணவர் அணி அமைப்பாளர் அருண்பிரசன்னா, துணை அமைப்பாளர்கள் ரமேஷ், விவசாயி அணி அமைப்பாளர் கருணாகரன், துணை அமைப்பாளர் அருமை சுந்தரம், பொறியாளர் அமைப்பாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story