ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிய நிலையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிய நிலையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2019 4:30 AM IST (Updated: 31 Jan 2019 12:06 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிய நிலையில் அரசு ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல், 

தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் நேற்று பணிக்கு திரும்பினர். இதையடுத்து மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் நேற்று முதல் செயல்பட தொடங்கின.

ஆனால் அரசு ஊழியர்கள் நேற்றும் பணிக்கு திரும்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல்லில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பெண்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊழியர்களை அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சில மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் அதன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல் ஜாக்டோ- ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திண்டுக்கல் மாநகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள் நேற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். மேலும் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கு மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். துணை தலைவர் லோகநாதன், செயலாளர் விஜயராகவன் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story