ரிஷிவந்தியம், சங்கராபுரத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல் - 92 பேர் கைது


ரிஷிவந்தியம், சங்கராபுரத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல் - 92 பேர் கைது
x
தினத்தந்தி 30 Jan 2019 10:45 PM GMT (Updated: 30 Jan 2019 6:48 PM GMT)

ரிஷிவந்தியம், சங்கராபுரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 92 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரிஷிவந்தியம், 

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரிஷிவந்தியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வேலை வழங்கவும், கள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு பொருட்களை பயன்படுத்தி காகிதம் தயாரிக்க தொழிற்சாலை அமைத்து வேலைவாய்ப்பு வழங்குதல் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், ஒன்றிய தலைவர் பிரேம்குமார் தலைமையில் ஊர்வலமாக சென்று பகண்டை கூட்டுரோடு பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த மறியலில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதுபற்றி அறிந்த பகண்டை கூட்டுரோடு போலீசார் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட 38 பேரை கைது செய்து, அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோல் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கராபுரம் வட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், வட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் மாவட்ட செயலாளர் ஏழுமலை, தலைவர் பழனி, வட்ட செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, கல்வராயன்மலையில் விளையும் கடுக்காய் கொட்டையை பயன்படுத்தி தொழிற்சாலை அமைத்து மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட வேண்டும், புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், காவல்துறை மற்றும் அரசு அலுவலகங்களை உடனே அமைத்து செயல்படுத்திட வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் போலீசார், மறியலில் ஈடுபட்ட 54 பேரை கைது செய்து, அதே பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story