தர்மபுரி மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினார்கள் விளக்கம் கேட்டு 84 பேருக்கு நோட்டீஸ்


தர்மபுரி மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினார்கள் விளக்கம் கேட்டு 84 பேருக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 31 Jan 2019 3:45 AM IST (Updated: 31 Jan 2019 12:26 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் நேற்று முழுமையாக பணிக்கு திரும்பினார்கள். இவர்களில் 84 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

தர்மபுரி,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களில் 27 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்(சஸ்பெண்டு) செய்யப்பட்டனர். இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரிய, ஆசிரியைகள் முழுமையாக நேற்று பணிக்கு திரும்பினார்கள். இதனால் பள்ளிகளில் நேற்று வழக்கம்போல் வகுப்புகள் நடந்தன. இதேபோல் அரசு ஊழியர்களில் பெரும்பாலானோரும் நேற்று பணிக்கு திரும்பினார்கள்.

இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வலியுறுத்தி 84 பேருக்கு நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி நோட்டீஸ் அனுப்பினார்.

இதற்கிடையே தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களை கைது செய்ய போலீசார் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் நேற்று அங்கு போராட்டம் நடைபெறவில்லை. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த அமைச்சு பணியாளர்களில் கணிசமானோர் நேற்று பணியை புறக்கணித்து ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story