விரல்கள் இல்லாத கைகளால் எழுதும் மாணவன் “சாதிப்பதற்கு ஊனம் தடையில்லை என்கிறான்”


விரல்கள் இல்லாத கைகளால் எழுதும் மாணவன் “சாதிப்பதற்கு ஊனம் தடையில்லை என்கிறான்”
x
தினத்தந்தி 31 Jan 2019 4:00 AM IST (Updated: 31 Jan 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தை சேர்ந்த 2-ம் வகுப்பு மாணவன் ஒருவருக்கு பாதி அளவே கைகள் உள்ளன. ஆனாலும் தன்னம்பிக்கையை இழக்காத அவன், ஊனம் ஒரு தடையில்லை என்கிறான்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள நல்லத்தன்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் வேதாரண்யத்தில் உள்ள ஒரு அச்சகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா. இந்த தம்பதிக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலில் ஆண் குழந்தை பிறந்தது. முதல் குழந்தை ஆணாக பிறந்த மகிழ்ச்சியில் இந்த தம்பதியினர் அளவிலா மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மகிழ்ச்சி அவர்களுக்கு நீடிக்கவில்லை.

காரணம், இந்த குழந்தையின் இரண்டு கைகளும் முழங்கை வரையில் பாதி அளவே இருந்தன. விரல்கள் இல்லை. இதனால் முதலில் அதிர்ச்சி அடைந்த இந்த தம்பதியினர், தங்களுக்கு ஆண்டவன் கொடுத்த பாக்கியம் இவ்வளவுதான் என்று மனதை தேற்றிக்கொண்டனர். தங்கள் மகனுக்கு துர்கேஸ்வரன் என்று பெயர் சூட்டினர். பிறவி ஊனம் தங்கள் மகனை எந்தவிதத்திலும் பாதித்து விடாத வகையில் துர்கேஸ்வரனை சுரேஷ்-சுகன்யா தம்பதியினர் வளர்த்து வருகிறார்கள்.

தற்போது துர்கேஸ்வரனுக்கு 7 வயதாகிறது. இவன் வடமழை ரஸ்தா பகுதியில் உள்ள ஒரு அரசு தொடக்க பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். மற்ற குழந்தைகளைப்போல் தனக்கு இரண்டு கைகளும் முழுமையாக இல்லையே என்று துர்கேஸ்வரன் கவலைப்பட்டதே இல்லை. உள்ளதைக்கொண்டு நல்லதை செய்வோம் என்றபடி தனக்கு இருக்கும் கைகளை வைத்துக்கொண்டு பள்ளியில் கற்பிக்கப்படும் கராத்தே, நடனம், கணினி உள்ளிட்டவற்றை கற்று வருகிறான் துர்கேஸ்வரன்.

மற்றவர்களுக்கு தான் எந்தவிதத்திலும் சளைத்தவன் அல்ல என்ற ரீதியில் தனது ஊனத்தை சிறிதளவும் பொருட்படுத்தாமல் வகுப்புஅறையில் ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை கவனித்து படித்து வருகிறான். விரல்கள் இல்லாத நிலையில், ஆசிரியர், கரும்பலகையில் எழுதி போடுவதை தனது முழங்கைகளுக்கு நடுவில் எழுதுகோலை பிடித்து நோட்டில் எழுதுகிறான். சக மாணவர்களுடன் உற்சாகமாக கற்று தேர்ச்சி அடைந்து, விரைவாக முன்னேறி வரும் துர்கேஸ்வரனுக்கு அவனது பள்ளியின் தலைமை ஆசிரியர் சிங்காரவடிவேலும், ஆசிரியை கஜலட்சுமியும் ஊக்கம் அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து துர்கேஸ்வரன் கூறியதாவது:-

எங்கள் பள்ளியில் தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், இந்தி ஆகியவையும் பயிற்சி அளிக்கப்படுகிறது. எனக்கு முன்னங்கைகள் இல்லை. கல்வி மற்றும் விளையாட்டில் எனக்கு உள்ள ஆர்வத்தை பார்த்த ஆசிரியை கஜலட்சுமி, தலைமை ஆசிரியர் ஆகியோர் எனக்கு பாடம் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் சாதனை படைக்க உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

இதனால் நான் தன்னம்பிக்கையுடன் பயின்று வருகிறேன். என்னுடைய ஊனத்தை நான் ஒரு போதும் தடையாக நினைத்து பார்த்தது கிடையாது. என்னால் முடிந்தவரை மற்றவர்களை எதிர்பார்க்காமல் எனக்கு தேவையானவற்றை செய்து வருகிறேன். சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையில்லை.

மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கத்தின் மூலமாக எனக்கு செயற்கை முன் கைகளை பொருத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கண்டிப்பாக நான் கல்வி மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் சாதனை படைப்பேன்.

இவ்வாறு அவன் கூறினான்.

கைகள் முழுமையாக உள்ளவர்களே உழைப்பதற்கு யோசிக்கும் இந்த காலத்தில் பாதி அளவே உள்ள கைககளை வைத்துக்கொண்டு சாதனை படைப்பேன் என்று கூறும் மாணவன் துர்கேஸ்வரனுக்கு அப்பகுதி மக்கள் பெரிதும் ஊக்கம் அளித்து வருகிறார்கள். நாமும் அவருக்கு ஒரு சபாஷ் போடலாமே!

Next Story