அரும்பாக்கத்தில் மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பிளஸ்–2 மாணவர் பலி


அரும்பாக்கத்தில் மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பிளஸ்–2 மாணவர் பலி
x
தினத்தந்தி 31 Jan 2019 4:00 AM IST (Updated: 31 Jan 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

அரும்பாக்கத்தில் மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பிளஸ்–2 மாணவர் பரிதாபமாக இறந்தார்.

பூந்தமல்லி,

சென்னை அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி, பசும்பொன் தெரு, பி.பிளாக்கை சேர்ந்தவர் அமுதன். ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மகன் அழகுசுந்தரம் (வயது 18). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.

நேற்று காலை அவரது பெற்றோர் அருகில் உள்ள ஏ.டி.எம். சென்று பணம் எடுத்து வருமாறு கூறினர். இதற்காக அழகுசுந்தரம், தனது விலை உயர்ந்த மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு ஏ.டி.எம். மையம் சென்று பணத்தை எடுத்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அரும்பாக்கம் தபால் நிலையம் அருகே வந்தபோது முன்னால் சென்ற மாநகர பஸ்சை முந்திச்செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த வாகனத்தின் மீது அழகுசுந்தரத்தின் மோட்டார்சைக்கிள் கைப்பிடி உரசியதால் நிலை தடுமாறி கீழே விழுந்ததார்.

அவர் மீது மாநகர பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் மாணவர் அழகுசுந்தரம் உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். ஆனால் இது தெரியாமல் மாநகர பஸ்சை டிரைவர் அங்கிருந்து ஓட்டிச்சென்று விட்டார்.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பலியான அழகுசுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, விபத்து ஏற்படுத்திய மாநகர பஸ் எது? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story