பண்ருட்டி அருகே, அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் ரூ.1¼ லட்சம் நகை-பணம் கொள்ளை


பண்ருட்டி அருகே, அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் ரூ.1¼ லட்சம் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 31 Jan 2019 4:30 AM IST (Updated: 31 Jan 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே அ.தி.மு.க. பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1¼ லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பண்ருட்டி, 

பண்ருட்டி அருகே உள்ள மேல்குமராமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனியப்பன்(வயது 44). பால் வியாபாரியான இவர் அ.தி.மு.க. கிளை செயலாளராகவும் இருந்து வருகிறார். ஆதிலட்சுமி(40) என்ற மனைவியும், மணிமேகலை(16) என்ற மகளும், சூரியபிரகாஷ்(14) என்ற மகனும் உள்ளனர்.

பிள்ளைகள் இருவரும் பண்ருட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இதனால் பழனியப்பன் பண்ருட்டியில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவ்வப்போது சொந்த ஊரில் உள்ள வீட்டுக்கும் சென்று வருவார்.

இந்த நிலையில் மேல்குமார மங்கலத்தில் உள்ள பழனியப்பனின் வீட்டின் சுற்றுச்சுவர் நுழைவு வாயில் கதவு, வீட்டின் முன்பக்க கதவு ஆகியவற்றில் போடப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் பழனியப்பனுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர் மேல்குமாரமங்கலத்தில் உள்ள வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தார். அப்போது வீட்டின் உள் அறையில் இருந்த கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த துணிகள் உள்ளிட்ட போருட்கள் சிதறி கிடந்தன.

பூஜை அறையில் சாமி படத்துக்கு பின்னால் டப்பாவில் மறைத்து வைத்து இருந்த 5 பவுன் சங்கிலி மற்றும் 3 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை காணவில்லை. அவற்றை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துசென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

இது பற்றிய தகவல் அறிந்து வந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டார். போலீஸ் மோப்ப நாய் புருனே வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து ஓடி சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சவுக்கு தோப்புக்குள் போய் நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதனால் கொள்ளையர்கள் இந்த வழியாக தப்பி சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவுசெய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். பண்ருட்டி அருகே அ.தி.மு.க. பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story