குடிநீர் திருட்டு; 13 மின்மோட்டார்கள் பறிமுதல்
குடிநீர் திருட்டு தொடர்பாக 13 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மீஞ்சூர்,
மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விதிமுறைகளை மீறி மின்மோட்டார்கள் மூலம் குடிநீர் எடுப்பதால் மற்ற வீடுகளுக்கு குடிநீர் கிடைப்பதில்லை என்று புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் வீடுகளில் இணைக்கப்பட்ட குடிநீர் குழாய்களை ஆய்வு செய்தனர். அப்போது சில வீடுகளில் விதிமுறைகளை மீறி மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடுவது தெரியவந்தது. திருட்டுத்தனமாக தண்ணீர் திருடப்படுவதை அறிந்த அதிகாரிகள் 8 மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் பேரூராட்சியின் அனுமதி இல்லாமல் வீடுகளில் மோட்டார்கள் மூலம் குடிநீர் திருடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் யமுனா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மீஞ்சூர் பஜாரில் உள்ள சாலை ஒர கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள், பஜார் பகுதியில் உள்ள கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பேரூராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் 1–வது வார்டில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது திருட்டுத்தனமாக மின்மோட்டார் வைத்து குடிநீர் திருடுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக 5 மின்மோட்டார்களை பறிமுதல் செய்த பேரூராட்சி நிர்வாகத்தினர், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அபராதமும் விதித்தனர். மேலும் உரிய அனுமதியின்றி குடிதண்ணீர் இணைப்பை பயன்படுத்தி வந்த ஒருவரது குடிநீருக்கான இணைப்பையும் அதிகாரிகள் துண்டித்தனர்.