அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பவில்லை தாலுகா அலுவலகம் வெறிச்சோடியது
அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பாததால் ஈரோடு தாலுகா அலுவலகம் வெறிச்சோடியது.
ஈரோடு,
ஜாக்டோ–ஜியோ தொடர் வேலை நிறுத்த போராட்டம் கடந்த 22–ந் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் எழுச்சியுடன் கலந்து கொண்ட ஆசிரிய–ஆசிரியைகள் கடுமையான நெருக்கடி காரணமாக போராட்டத்தை கைவிட்டு நேற்று முதல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால், அரசு ஊழியர்கள் பணியில் சேரவில்லை. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை அரசு ஊழியர் சங்கம், உள்ளாட்சித்துறை பணியாளர்கள் சங்கம், வருவாய்த்துறை, வணிகவரித்துறை, கருவூலத்துறை உள்ளிட்ட எந்த அரசு ஊழியர் சங்கத்தினரும் பணிக்கு திரும்பவில்லை. அவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஈரோடு தாலுகா அலுவலகம் நேற்று வெறிச்சோடியது. தாலுகா அலுவலகத்தில் ஒரு கதவு மட்டும் திறந்து வைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள் ஏதேனும் தேவை தொடர்பாக மனு கொண்டு வந்தாலும் அவர்கள் பணியில் யாரும் இல்லாததால் ஏமாற்றத்துடன் சென்றனர். வட்ட வழங்கல் அலுவலகம், தேர்தல் பிரிவு அலுவலகம், கலால் அலுவலகம் ஆகியவையும் பூட்டப்பட்டு இருந்தன. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் பணியாளர்கள் யாரும் வரவில்லை.
ஆர்.டி.ஓ. அலுவலகம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட எந்த அலுவலகத்திலும் பணியாளர்கள், ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை. ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றி வரும் காவல்துறை அமைச்சு பணியாளர்களும் நேற்று முழுமையாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஜாக்டோ–ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது. ஈரோடு மாவட்டத்தில் இந்த சங்கத்தை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட டிரைவர்கள் நேற்று அதிகாரிகளுக்கு வாகனங்கள் ஓட்ட செல்லாமல் விடுமுறை எடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் சண்முகம், துணைத்தலைவர் பாபு, மாநில செயற்குழு உறுப்பினர் பொங்கியண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரசு ஊழியர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் செய்து வருவதால் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரசு அலுவலகங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.