சேலம் அஸ்தம்பட்டியில் சோதனை முயற்சியாக போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ரோபோ


சேலம் அஸ்தம்பட்டியில் சோதனை முயற்சியாக போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ரோபோ
x
தினத்தந்தி 30 Jan 2019 9:45 PM GMT (Updated: 30 Jan 2019 8:12 PM GMT)

சேலம் அஸ்தம்பட்டியில் சோதனை முயற்சியாக போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது.

சேலம், 

சேலம் மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்த காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. சென்னையில் முதன்முதலாக போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ரோபோவை காவல் துறையினர் அறிமுகப்படுத்தினர்.

சென்னையை தொடர்ந்து சேலத்திலும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ரோபோவை பயன்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி போக்குவரத்து நெரிசலை ரோபா சரி செய்யும் பணியில் ஈடுபடுத்துவது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி சேலத்தில் நேற்று நடந்தது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த மாநகரின் மையப்பகுதியான அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ரோபோவை சேலம் மாநகர போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சியாமளாதேவி அறிமுகப்படுத்தி வைத்து, அதன் செயல்பாடுகளை பார்வையிட்டார். பின்னர் ரோபோ தனது பணியை தொடங்கியது. இதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.

இந்த ரோபோ குறித்து மாநகர துணை போலீஸ் கமிஷனர் சியாமளாதேவி கூறியதாவது:-

மாநகரத்தில் முதற்கட்டமாக போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய ரோபோவை ஒரு நாள் செயல்முறை விளக்கமாக அறிமுகப்படுத்தி உள்ளோம். இதை கட்டுப்படுத்த அதற்காக வடிவமைக்கப்பட்டு உள்ள மொபைல் ஆப் மூலம் போக்குவரத்து காவலர் இயக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும்.

சாலை விதிகளை மீறும் வாகனங்களின் பதிவு எண்களை ஸ்கேன் செய்து உடனடியாக மோட்டார் வாகன செயலியின் உதவியுடன் வாகன உரிமையாளரின் பெயரை கூறி எச்சரிக்கை விடுக்கும் வகையில் செயல்படும். இதன் செயல்பாடுகளை ஆராய்ந்து தொடர்ந்து பணியில் ஈடுபடுத்துவது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும். இதேபோல் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தானியங்கி ரோபோ விரைவில் பயன்படுத்தப்படும். இதனால் போக்குவரத்து நெரிசலை யார் உதவியும் இன்றி தானியங்கி ரோபோ கட்டுப்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story