தமிழகத்தில் எப்போது தேர்தல் நடந்தாலும் 234 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
‘தமிழகத்தில் எப்போது தேர்தல் நடந்தாலும் 234 தொகுதிகளிலும் தி.மு.க.வெற்றி பெறும்’ என்று சேலம் அருகே நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சேலம்,
சேலம் மாவட்டம் பாகல்பட்டி கிராமத்தில் தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகத்திலேயே எந்த கட்சியும் இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து மக்களை சந்தித்தது கிடையாது. உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்தி இருந்தால் நாங்கள் ஊராட்சி சபை கூட்டத்தை நடத்த தேவை இருந்திருக்காது. மக்களை பொறுத்தவரை தெளிவாக இருக்கிறார்கள். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியையும், மத்தியில் மோடி ஆட்சியையும் அகற்றுவதற்கு அவர்கள் தயாராகிவிட்டனர். இதன் மூலம், தமிழகத்தில் எப்போது தேர்தல் நடந்தாலும் 234 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிபெறும் நிலை உருவாகி உள்ளது. இதனை நிறைவேற்றும் பொறுப்பு வாக்குச்சாவடி முகவர்கள் கையில் தான் உள்ளது. உங்களை உற்சாகப்படுத்துவதற்காகவே இந்த கூட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 20 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 இளைஞர்களும், 5 பெண்களும் அடங்குவர்.
முகவர்கள் வார்டில் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று தி.மு.க.விற்கு எத்தனை வாக்குகள் கிடைக்கும், மற்ற கட்சிகளுக்கு எத்தனை வாக்குகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மற்ற கட்சிகளுக்கு வாக்களிக்க நினைப்பவர்களிடம் அ.தி.மு.க. ஆட்சியின் அவல நிலையை எடுத்து கூறி தி.மு.க.விற்கு வாக்கு சேகரிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் நாங்கள் இங்கு வரமுடியாது.
எனவே அந்த பணிகளை வாக்குச்சாவடி முகவர்கள் தான் செய்யவேண்டும். தலைமை எந்த உத்தரவு போட்டாலும் அதை நிறைவேற்றும் தகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கையில் தான் உள்ளது. தமிழகத்தில் மோடியின் பினாமி ஆட்சி நடந்து வருகிறது. விரைவில் நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழக சட்டசபை பொதுதேர்தலும் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வாக்குச்சாவடி முகவர்கள் பாடுபட வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
Related Tags :
Next Story