சேலத்துக்கு நாளை வரும் முதல்-அமைச்சரை வரவேற்க அ.தி.மு.க. வினர் திரண்டு வரவேண்டும் ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. பேச்சு


சேலத்துக்கு நாளை வரும் முதல்-அமைச்சரை வரவேற்க அ.தி.மு.க. வினர் திரண்டு வரவேண்டும் ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 31 Jan 2019 3:30 AM IST (Updated: 31 Jan 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

சேலத்திற்கு நாளை வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அ.தி.மு.க.வினர் திரண்டு வரவேண்டும் என்று ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கூறினார்.

சேலம், 

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை (வெள்ளிக்கிழமை) சேலம் வருகிறார். அவரை வரவேற்பது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று சேலத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம் எம்.பி. தலைமை தாங்கினார். சக்திவேல் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.செல்வராஜ், முன்னாள் மேயர் சவுண்டப்பன், முன்னாள் துணை மேயர் நடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை சேலம் வருகிறார். சேலம் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. எனவே முதல்-அமைச்சரை வரவேற்க அ.தி.மு.க.வினர் திரண்டு வரவேண்டும்.


பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள தர்மபுரி செல்கிறார். மதியம் 3 மணிக்கு ஓமலூர் புறநகர் மாவட்ட அலுவலகத்தில் வாக்குச்சாவடி முகவர்களுடன் கலந்துரையாடுகிறார். மாலை 4 மணிக்கு அஸ்தம்பட்டி சுற்றுலா மாளிகையில் மாநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

2-ந்தேதி காலை 7.30 மணிக்கு கந்தம்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் ரூ.33 கோடியில் உயர்மட்ட மேம்பால பணியை தொடங்கி வைக்கிறார். மதியம் 2 மணிக்கு எடப்பாடியில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

எனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாநகர் மாவட்ட துணை செயலாளர் ஏ.கே.எஸ்.எம்.பாலு, மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் ஜான்கென்னடி, பகுதி செயலாளர்கள் தியாகராஜன், சரவணன், யாதவமூர்த்தி, கூட்டுறவு சங்க தலைவர்கள் ராம்ராஜ், சுந்தரபாண்டியன், பெரியபுதூர் கண்ணன், கே.சி.செல்வராஜ், கர்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story