குமரியில் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளைக்கு மணிமண்டபம் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு


குமரியில் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளைக்கு மணிமண்டபம் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு
x
தினத்தந்தி 31 Jan 2019 4:30 AM IST (Updated: 31 Jan 2019 2:27 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளைக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று மாலை நடந்தது.

விழாவுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பேசினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு வரவேற்றார். குமரி மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன் வாழ்த்தி பேசினார். தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் 152 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.76 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

அப்போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த விழாவில் 152 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அ.தி.மு.க. அரசு தான் அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான திட்டங்களை வழங்கி வருகிற அரசாக இருக்கிறது என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அதனால் மாற்றுத்திறனாளிகள் இந்த அரசுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும்போது கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தை திருநாளை மக்கள் சிறப்பாக கொண்டாட ரூ.1000 தந்த ஒப்பற்ற அரசு தமிழக அரசு. குமரி மாவட்டத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த மாவட்டத்தை சேர்ந்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு மணிமண்டபம் அமைக்க அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் என்னிடம் கேட்டுக்கொண்டுள்ளார். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு சிலை அமைத்துக் கொடுத்தவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இன்று அவருக்கு குமரியில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வருகிற சட்டசபை நிதிநிலை அறிக்கை மானிய கூட்டத்தில் இந்த கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் பேசுகையில், குமரி மாவட்டத்தில் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளைக்கு மணிமண்டபம் கட்ட அமைச்சர் கடம்பூர்ராஜூ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விழாவில் அ.தி.மு.க. மருத்துவர் அணி கிழக்கு மாவட்ட செயலாளர் சி.என்.ராஜதுரை உள்பட அதிகாரிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களின் யதார்த்த உணர்வுகளை புரிந்து கொண்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்று அரசு பலமுறை ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (நேற்று) காலையில் கூட போராட்டத்தை கைவிடுங்கள், உடனடியாக வேலைக்கு திரும்புங்கள் என்று கோரிக்கையும், அழைப்பும் விடுத்தார். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு அவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டதற்கு அரசு சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்ததற்கும், ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எதிர்க்கட்சி தலைவர், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று நடைமுறைக்கு வராத ஒன்றை சொல்லி கொண்டிருப்பார்.

அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதிய கமிஷன் உள்பட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தந்திருக்கிறது. போராட்டத்தின் போது அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகளை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை ஜாக்டோ- ஜியோ முன்வைத்துள்ளதாக கூறுகிறீர்கள். அதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்.

ஜெயலலிதாவின் அரசு எந்த தேர்தலையும் நடத்த பின்வாங்கியதில்லை. தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நீதிமன்றம் சென்ற காரணத்தால் தான் உள்ளாட்சி தேர்தல் தடைபட்டது. எனவே அ.தி.மு.க. அரசு தேர்தல்களை சந்திப்பதற்கு என்றைக்கும் தயாராக இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்ய எந்த கட்சியும் அறிவிக்காத நிலையில், முதன் முதலில் தமிழகத்தில் விருப்பமனு தாக்கல் செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ள ஒரே கட்சி அ.தி.மு.க. தான்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். 

Next Story