இந்தியன் வங்கியின் வர்த்தகம் ரூ.4 லட்சம் கோடியை தாண்டியது பொது மேலாளர் நாகராஜன் தகவல்


இந்தியன் வங்கியின் வர்த்தகம் ரூ.4 லட்சம் கோடியை தாண்டியது பொது மேலாளர் நாகராஜன் தகவல்
x
தினத்தந்தி 31 Jan 2019 4:15 AM IST (Updated: 31 Jan 2019 2:57 AM IST)
t-max-icont-min-icon

இந்தியன் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.4 லட்சம் கோடியை தாண்டியது என்று திருச்சி நிகழ்ச்சியில் பொது மேலாளர் நாகராஜன் கூறினார்.

திருச்சி,

திருச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று இந்தியன் வங்கியின் உயர் மதிப்பு வாடிக்கையாளர்கள் (எச்.என்.ஐ. கஸ்டமர்ஸ்) கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. திருச்சி மண்டல மேலாளர் வி.சாமிநாதன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் தொழில் அதிபர்கள், வியாபார பிரமுகர்கள், தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு தொழில் அபிவிருத்தி மற்றும் புதிய தொழில்கள் தொடங்குவதற்கு ரூ.2 கோடிக்கு மேல் கடன் பெறுவதற்கான தங்களது திட்டம் பற்றி எடுத்து கூறினார்கள். ரூ.100 கோடிக்கு கடன் வழங்குவது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் இந்தியன் வங்கியின் பொது மேலாளர் (திட்டம்) எம். நாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில் ‘நூறாண்டுக்கு மேல் பழமை வாய்ந்த இந்தியன் வங்கி தற்போது ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் வர்த்தகம் செய்து உள்ளது. இதன் மூலம் பெரிய வங்கிகள் பட்டியலில் இடம் பெறுகிறது. நாடு முழுவதும் 2,900 கிளைகளை கொண்டு இயங்கி வரும் இந்தியன் வங்கியின் வளர்ச்சிக்கு வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பே முக்கிய காரணமாகும். வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே எங்கள் நோக்கம்’ என்றார்.

முன்னதாக 90 மகளிர் சுய உதவி குழுவினருக்கு பல்வேறு தொழில் செய்வதற்கு ரூ.5 கோடியே 59 லட்சம் மதிப்புள்ள கடன் தொகைக்கான காசோலைகளை பொது மேலாளர் நாகராஜன் வழங்கினார். இதனை தொடர்ந்து நடைபெற்ற வங்கி சேவைகளை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் நாகராஜன் பங்கேற்று பேசினார்.

இதில் மாவட்ட தொழில் மையத்தின் உதவி பொறியாளர் கம்பன் சிறப்புரையாற்றினார். இந்தியன் வங்கியின் மண்டல அலுவலக அதிகாரிகள், கிளை மேலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை மண்டல மேலாளர் என். ராஜாமணி நன்றி கூறினார்.

Next Story