கூடலூர் அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ


கூடலூர் அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ
x
தினத்தந்தி 31 Jan 2019 3:30 AM IST (Updated: 31 Jan 2019 3:01 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியது.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் இரவில் பனிப்பொழிவும், பகலில் வெயிலும் உள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் மற்றும் புற்கள் கருகி வருகின்றன. இந்த வறட்சியான காலநிலையை பயன்படுத்தி சமூக விரோதிகள் வனப்பகுதிக்கு தீ வைக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி தீயில் கருகி நாசமாகிறது. மேலும் குரைக்கும் மான், முயல், பாம்பு, பறவை, பூச்சி உள்ளிட்ட சிறு வன உயிரினங்கள் தீயில் எரிந்து உயிரிழந்து வருகின்றன. வனப்பகுதிக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் தீ வைக்கும் செயல்கள் தொடர்கிறது.

இந்த நிலையில் கூடலூர் தாலுகா மரப்பாலம் அருகே சீனக்கொல்லி பகுதியில் நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் வனப்பகுதிக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றனர். இதனால் சுமார் 1 ஏக்கர் பரப்பளவிலான புதர்களில் தீ மள மளவென பரவியது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து தேவாலா வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல கட்ட போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இதனிடையே வனப்பகுதிக்கு தீ வைத்த மர்ம ஆசாமிகள் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வனப்பகுதிக்கு தீ வைப்பதை தடுக்க கண்காணிப்பு பணியை தீவிரப் படுத்தி உள்ளனர்.

Next Story