பிரதமர் பதவியையே தியாகம் செய்த குடும்பம் முதல்-மந்திரி பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பேனா? குமாரசாமி பரபரப்பு பேச்சு


பிரதமர் பதவியையே தியாகம் செய்த குடும்பம் முதல்-மந்திரி பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பேனா? குமாரசாமி பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 31 Jan 2019 3:30 AM IST (Updated: 31 Jan 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் பதவியையே தியாகம் செய்தது எங்கள் குடும்பம், முதல்-மந்திரி பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பேனா? என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

பெங்களூரு,

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் பெங்களூருவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் செயற்குழுவை தொடர்ந்து கட்சியின் பொதுக்கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்-மந்திரி குமாரசாமி பேசும்போது கூறியதாவது:-

44 லட்சம் விவசாயிகள்

விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தேன். அதை அமல்படுத்தியுள்ளேன். ஆனால் இந்த விஷயத்தில் இன்னும் என்னை சந்தேகிக்கிறார்கள். பிரதமர் மோடியும், விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை ‘லாலிபாப்’ என்று விமர்சிக்கிறார்.

சித்தராமையா ஆட்சியில் கடன் தள்ளுபடியில் ரூ.3,800 கோடி நிலுவையில் இருந்தது. அந்த தொகையையும் விடுவித்துள்ளோம். வருகிற 8-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்கிறேன். இதில் 44 லட்சம் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்படும்.

கண்ணீர் சிந்தினேன்

நமது கட்சி அலுவலகத்தில் பேசும்போது நான் கண்ணீர் சிந்தினேன். இன்றும் எனது மனதில் வேதனை இருக்கிறது. அந்த வேதனையை மறந்து மக்களின் கஷ்டத்தை தீர்த்து வருகிறேன். நான் எளிதில் உணர்ச்சிவசப்படுபவன்.

நான் யாரையும் சந்திப்பது இல்லை, யார் கைக்கும் கிடைப்பது இல்லை என்று சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரப்புகிறார்கள். நான் அரசு ஊழியர்களை இடமாற்றம் செய்து கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டுமா?.

கெடு விதித்தனர்

சங்கராந்தி பண்டிகைக்குள் கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதாக பா.ஜனதாவினர் கெடு விதித்தனர். இப்போது சட்டசபை கூட்டத்தொடருக்கு கெடு விதித்துள்ளனர். ஊடகங்கள் மூலம் இத்தகைய தகவல்களை வெளியிடுகிறார்கள்.

இவ்வாறு தவறான செய்திகளை பரப்பினால், அதிகாரிகள் எப்படி பணியாற்றுவார்கள்?. அன்று மத்தியில் பிரதமர் பதவிக்கு யாரும் கிடைக்கவில்லை. தேவேகவுடாவை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பிரதமர் பதவியில் அமர வைத்தனர்.

பிரதமர் பதவி தியாகம்

பிரதமர் பதவியை தேவேகவுடா தியாகம் செய்தார். பிரதமர் பதவியையே தியாகம் செய்தது எங்கள் குடும்பம். நான், முதல்-மந்திரி பதவியுடன் ஒட்டிக்கொண்டு இருப்பேனா?. மக்களுக்கு மோசம் செய்து, நான் இந்த பதவியில் தொடர்வேனா?.

எடியூரப்பா சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கு சென்று அதிகாரிகள் மீது கோபத்தை காட்டியுள்ளார். சித்ரதுர்காவுக்கு சென்று வறட்சியை ஆய்வு செய்வது போல் நடிக்கிறார். மத்தியில் பா.ஜனதா அரசு உள்ளது. அங்கு சென்று, கர்நாடகத்திற்கு தேவையான நிதியை பெற்றுத்தர முடியாதா?.

ராஜினாமா செய்வேன்

தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை ரெசார்ட்டுக்கு அழைத்துச் சென்று கூட்டணி ஆட்சியை கவிழ்க்க எடியூரப்பா முயற்சி செய்தார். அப்போது அவருக்கு விவசாயிகளின் கஷ்டம் புரியவில்லையா?. எடியூரப்பாவை போல் நான் மோசமான அரசியலை செய்ய மாட்டேன்.

ராஜினாமா செய்வேன் என்று நான் கூறியது உண்மை தான். எத்தனை நாட்கள் தான் வலியை தாங்கிக்கொண்டிருக்க முடியும். காங்கிரசார் சொல்கின்ற அனைத்து வேலைகளையும் செய்து தருகிறேன். அவ்வாறு இருந்தும், என்னை சிலர் குறை சொல்கிறார்கள்.

நோட்டீசு அனுப்ப...

ராகுல் காந்தியை சந்தித்தபோது, எந்த பிரச்சினையாக இருந்தாலும் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபாலிடம் கூறுங்கள், அதை அவர் சரிசெய்வார் என்று கூறினார்.

அதன்படி நான் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பேசிய பேச்சு குறித்து புகார் கூறினேன். கே.சி.வேணுகோபால், அந்த எம்.எல்.ஏ.வுக்கு நோட்டீசு அனுப்ப கர்நாடக காங்கிரஸ் தலைவருக்கு உத்தரவிட்டார்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story