போலீஸ் ஐ.ஜி.ரூபாவின் செல்போன் திருட்டுப்போனதாக பதிவான வழக்கு ரத்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
போலீஸ் ஐ.ஜி.ரூபாவின் செல்போன் திருட்டுப்போனதாக பதிவான வழக்கு ரத்து செய்யப்பட்டது.
பெங்களூரு,
கர்நாடக ஊர்க்காவல் படை போலீஸ் ஐ.ஜி.யாக இருந்து வருபவர் ரூபா. இவர், கடந்த ஆண்டு(2018) அக்டோபர் 21-ந் தேதி ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள பிலிம் சிட்டிக்கு சென்றிருந்தார். அப்போது தனது செல்போன் திருட்டுப்போனதாக கூறி, மறுநாள் (22-ந் தேதி) பிடதி போலீசாருக்கு இ-மெயில் மூலம் போலீஸ் ஐ.ஜி. ரூபா புகார் அளித்திருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். மேலும் ரூபாவின் ெசல்போனை போலீசார் மீட்டு இருந்தனர். இதுதொடர்பாக ராமப்பா என்பவர் மீது பிடதி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ஆனால் போலீஸ் ஐ.ஜி. ரூபாவின் செல்போன் திருட்டுப்போகவில்லை என்பதும், அவர் மறந்து வைத்துவிட்டு சென்றிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸ் ஐ.ஜி. ரூபாவின் செல்போன் திருட்டுப்போனதாக கூறி பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி ராமப்பா கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது ரூபாவின் செல்போன் திருட்டு போகவில்லை, அவர் தான் மறந்து செல்போனை வைத்துவிட்டு சென்றிருந்தது நிரூபணமானதால், பிடதி போலீஸ் நிலையத்தில் பதிவான செல்போன் திருட்டு வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
Related Tags :
Next Story