பொருட்களை தரமானதாக உற்பத்தி செய்தால் வணிக வாய்ப்புகள் அதிகரிக்கும் இந்தியன் வங்கியின் செயல் இயக்குனர் பேச்சு
பொருட்களை தரமானதாக உற்பத்தி செய்தால் வணிக வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று இந்தியன் வங்கியின் செயல் இயக்குனர் எம்.கே.பட்டாச்சார்யா கூறினார்.
ஆம்பூர்,
மத்திய அரசு சார்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு செயல்படுத்தியுள்ள சிறப்பு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆம்பூர் வர்த்தக மையத்தில் நடந்தது. இதில் மத்திய அரசின் இணை செயலாளர் சுதான்சு குப்பா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி 59 நிமிடங்களில் ரூ.1 கோடி வரையில் கடன் பெற ஆன்லைன் பதிவு செய்வதற்கான இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். அதேபோல் அரசு துறைகள் தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்வதற்காக ‘ஜெம்’ என்ற பெயரில் இ-மார்க்கெட்டிங் இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் குறித்து அந்த இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவு செய்தவர்களிடம் இருந்து அரசு துறை நிறுவனங்களுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது. சிறு, குறு தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு திட்டமாக பி.எப். மற்றும் காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத் தொடர்ந்து இந்தியன் வங்கியின் செயல் இயக்குனர் எம்.கே.பட்டாச்சார்யா பேசுகையில், இந்தியாவில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் 60 சதவீதம் தமிழ்நாட்டில் இயங்கி வருகிறது. அதிலும் 42 சதவீதம் வேலூர் மாவட்டத்தில் இயங்கி வருகிறது. பொருட்களை தரமானதாக உற்பத்தி செய்தால் வணிக வாய்ப்புகள் அதிகரிக்கும். பொருட்களின் தரத்தை உறுதி படுத்துவதற்காக தரச்சான்றினை பெற்றும் வணிகம் செய்யலாம். கடன் அட்டையாக இருந்தாலும், வேறு ஏதேனும் கடனாக இருந்தாலும் குறிப்பிட்ட தேதியில் அந்த கடனை திருப்பி செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாமல் விட்டால் ‘சிபில்’ மதிப்பெண்கள் கிடைக்காமல் மேலும் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
விவசாயம், சுய உதவிகுழுக்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறது. ஆகவே மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்கள், சலுகைகளை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற்று பயன் அடையலாம்’ என்றார்.
விழாவில் இந்தியன் வங்கி (எம்.எஸ்.எம்.இ) பொது மேலாளர் சந்திராரெட்டி, ஐ.ஒ.பி. வங்கி பொது மேலாளர் கேதர்நாத், மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் வசந்தகுமார், மண்டல பி.எப். ஆணையாளர் எஸ்.டி.சிங்ஸ், சிட்பி வங்கியின் துணை பொது மேலாளர் ஆர்.சுகுமார், அரசு இ-மார்க்கெட்டிங் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ஆகியோர் அரசின் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர்.
இதில் மாவட்ட சிறு, குறு தொழில் முனைவோர் சங்க தலைவர் சுவாமிநாதன், ஆம்பூர் தோல் தொழில் அதிபர் சங்க பொது செயலாளர் பையாஸ்அகமத், வாணியம்பாடி தோல் தொழில் அதிபர்கள் சங்க மேலாண்மை இயக்குனர் இக்பால்அஹமத், பிர்தோஸ் கே.அஹமத், சாய் கே.வெங்கடேசன் மற்றும் தொழில் முனைவோர், மகளிர் சுய உதவி குழுவினர், பல்வேறு வங்கி கிளை மேலாளர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக கடன் உதவியும் வழங்கப்பட்டது. மேலும் வங்கிகள் சார்பில் கண்காட்சி அரங்குகள் வைக்கப்பட்டு இருந்தன.
Related Tags :
Next Story