கார் டிரைவரை சுட்டு கொல்ல முயன்ற வழக்கில் 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு
கார் டிரைவரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
மும்பை,
தானே மும்ராவை சேர்ந்தவர் தபரேஸ் (வயது30). இவர் பாந்திராவில் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2013-ம் ஆண்டு பணி முடிந்து வீட்டிற்கு செல்ல தாதர் ரெயில் நிலையம் வந்தார். அம்பர்நாத் செல்லும் ரெயிலில் ஏறி சரக்கு பெட்டியில் பயணம் செய்தார்.
அப்போது விக்ரோலி ரெயில் நிலையத்தில் வைத்து அந்த பெட்டியில் 4 பேர் ஏறினர். அவர்களில் ஒருவர் தபரேசின் காலில் மிதித்து விட்டார். இதுபற்றி அவர் தட்டி கேட்டார். இதில் கார் டிரைவருக்கும், அவர்கள் 4 பேருக்கும் இடையே சண்டை உண்டானது.
இதனால் கடும் ஆத்திரமடைந்த 4 பேரும் அவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். மேலும் ரெயில் நாகுர் நிலையம் வந்தபோது தபரேசை பெட்டியில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே இழுத்து போட்டனர்.
5 ஆண்டு சிறை
பின்னர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவர் மீது 2 ரவுண்ட் சுட்டார். இதில் தபரேஸ் உடலில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு பின் அவர் குணமானார்.
இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் இதில் தொடர்புடைய குட்டு சேக் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது மும்பை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நிறைவில், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பு கூறிய செசன்ஸ் கோர்ட்டு, 4 பேருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
Related Tags :
Next Story