மேலப்பாளையம் வீரமாணிக்கபுரம் பகுதியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


மேலப்பாளையம் வீரமாணிக்கபுரம் பகுதியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 31 Jan 2019 4:15 AM IST (Updated: 31 Jan 2019 5:46 AM IST)
t-max-icont-min-icon

மேலப்பாளையம் வீரமாணிக்கபுரம் பகுதியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை, 

நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 28-வது வார்டு வீரமாணிக்கபுரம் பகுதியில் சியோன்நகர், பாண்டித்துரை 1-வது தெரு, காந்திபுரம் 2-வது தெரு, மாசிலாமணிநகர், சேவியர் காலனி, சேவியர் காலனி விரிவாக்கப்பகுதி உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் உள்ளன.

அந்த தெருக்களில் உள்ள சாலைகள் குண்டும்-குழியுமாக மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன. மழைக்காலங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்கி மக்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இந்த நிலையில் வீரமாணிக்கபுரம் பகுதியில் குடிநீர் திட்டத்துக்கு குழாய் அமைக்க கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குழி தோண்டப்பட்டது. குழாய்கள் பதித்த பின்னர் அந்த பள்ளம் மணலால் மூடப்பட்டது. இதனால் அந்த பகுதி மேடு, பள்ளமாக காட்சி அளிக்கிறது. கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஏற்கனவே மோசமாக இருந்த அந்த சாலை தற்போது மிகவும் மோசமாக இருக்கிறது.

எனவே அந்த பகுதியில் உள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகநயினார் கூறும்போது, “நான் கனரா வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பல ஆண்டுகளாக இந்த பகுதியில் குடியிருந்து வருகிறேன். சாலைகள் மோசமாக இருக்கிறது என்று பலமுறை எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்து உள்ளனர். ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாநகராட்சி நிர்வாகம் சாலைகளை சீரமைத்து தார்ச்சாலை அமைக்க முன்வர வேண்டும்“ என்றார்.

இதுகுறித்து நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “மேலப்பாளையம் மண்டல பகுதியில் பழுதடைந்த சாலைகள் தற்போது சீரமைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி பகுதியில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் வீரமாணிக்கபுரம் பகுதியில் தார்சாலை அமைக்கப்படும்“ என்றார். 

Next Story