செஞ்சி அருகே பட்டப்பகலில் துணிகரம் ரேஷன் கடை ஊழியர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை-பணம் திருட்டு


செஞ்சி அருகே பட்டப்பகலில் துணிகரம் ரேஷன் கடை ஊழியர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 31 Jan 2019 10:15 PM GMT (Updated: 2019-01-31T22:41:17+05:30)

செஞ்சி அருகே பட்டப்பகலில் ரேஷன் கடை ஊழியர் வீட்டுக்குள் நுழைந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

செஞ்சி,

செஞ்சி அருகே உள்ள அன்னியூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரகுருபரன்(வயது 42). இவருக்கு சுமதி(40) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். குமரகுருபரன் சூரப்பட்டில் உள்ள ரேஷன் கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சுமதி அதேஊரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் குமரகுருபரனின் தாயார் வனமயில் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலை கணவன்-மனைவி இருவரும் வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டனர். குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு சென்றுவிட்டனர். உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்த வனமயில் காலை வீட்டு கதவை பூட்டி, சாவியை வாசற்படி அருகே உள்ள அலமாரியில் வைத்து விட்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் மாலை பணி முடிந்ததும் சுமதி மற்றும் மருத்துவமனைக்கு சென்ற வனமயில் ஆகியோர் வீடு திரும்பினார்கள். அப்போது வீட்டின் அறையில் இருந்த பீரோ பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த சுமதி பீரோவை சோதனை செய்தபோது, அதில் வைத்திருந்த 12 பவுன் நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாயை காணவில்லை. இதன் மொத்த மதிப்பு ரூ.3 லட்சமாகும்.

இதுபற்றி தகவல் அறிந்த கஞ்சனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வனமயில் வீட்டு கதவை பூட்டி சாவியை அலமாரியில் வைத்துவிட்டு மருத்துவமனைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அந்த சாவியை எடுத்து வீட்டு கதவை திறந்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அவர்கள் பீரோ பூட்டை உடைத்து அதில் இருந்த நகை, பணத்தை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதனிடையே விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த வீட்டில் பதிவான மர்மநபர்களின் ரேகைகள் சேகரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து விழுப்புரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் சாய்னா, திருட்டு நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி அங்குள்ள பஸ் நிறுத்தம் வரை ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் ரேஷன் கடை ஊழியர் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story