இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: மாவட்டம் முழுவதும் 19 லட்சத்து 71 ஆயிரம் வாக்காளர்கள் ஆண்களைவிட பெண்களே அதிகம்
திருவண்ணாமல மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 19 லட்சத்து 71 ஆயிரத்து 317 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.
திருவண்ணாமலை,
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு நிகழ்ச்சி நடந்தது. திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கே.எஸ்.கந்தசாமி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி, அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கடசிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் கலெக்டர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த 2018 செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 31-ந் தேதி நடைபெற்ற சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் மாவட்டம் முழுவதும் பெறப்பட்ட படிவங்கள் மீது இறுதி நடவடிக்கை மேற்கொண்டு நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வாக்காளர் பட்டியலில் 9 லட்சத்து 71 ஆயிரத்து 811 ஆண் வாக்காளர்களும், 9 லட்சத்து 99 ஆயிரத்து 430 பெண் வாக்காளர்களும், 76 இதர வாக்காளர்களும் என மொத்தம் 19 லட்சத்து 71 ஆயிரத்து 317 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.
இந்த வாக்காளர் பட்டியல் அனைத்து தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
இந்த பட்டியலை அனைவரும் சரிபார்த்துக் கொள்ளலாம். தகுதியுடைய வாக்காளர்களின் பெயர் ஏதேனும் விடுபட்டு இருந்தால் தகுந்த ஆதாரங்களுடன் அந்தந்த தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர்களின் உதவிக்காக வாக்காளர் உதவி மையம் சேவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டு செயல்படுகிறது. இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு வாக்காளர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்டு அறியலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story