மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலைத்துறைக்கு ரூ.117 கோடி நிதி ஒதுக்கீடு அசோக்குமார் எம்.பி. தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலைத்துறைக்கு ரூ.117 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அசோக்குமார் எம்.பி. கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இயற்கை வேளாண்மை குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்தது. இதற்கு கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். கே.அசோக்குமார் எம்.பி. கருத்தரங்கையும், கண்காட்சியையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் இயற்கை வேளாண்மை தொழில் நுட்பங்கள் குறித்து பையூர் மண்டல ஆராய்ச்சி மைய பேராசிரியர் தமிழ்ச்செல்வன், வேளாண்மை பயிர்களில் இயற்கை வழி பயிர் பாதுகாப்பு குறித்து வேளாண் அறிவியல் மையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜ், வேளாண் பயிர்களில் இயற்கை வழிநோய் மேலாண்மை குறித்து பையூர் மண்டல ஆராய்சி நிலையம் உதவி பேராசிரியர் ஆனந்த், வேளாண்மை பயிர்களில் உர நிர்வாகம் குறித்து வேளாண்மை அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் குணசேகர் ஆகியோர் பேசினார்கள்.
நிகழ்ச்சியில் அசோக்குமார் எம்.பி. பேசியதாவது:-
மாவட்டத்திற்கு மலர் ஏற்றுமதி மையம் உருவாக்க வேண்டும். யானைகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரண நிதி உயர்த்தி வழங்க வேண்டும். யானைகள் நுழைவிடம் கண்டறிந்து சேதம் அடைந்த பயிர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். தேனீ் வளர்ப்பதற்கு மானியம் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் நலனை கருதி மத்திய அரசிடம் முன் வைத்துள்ளேன். தமிழக அரசு நமது மாவட்டத்திற்கு வேளாண்மைத்துறைக்கு மட்டும் ரூ. 37 கோடி நிதியும், தோட்டக்கலைத்துறைக்கு ரூ. 80 கோடி நிதியும் பல்வேறு பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நெல் 24 ஆயிரத்து 500 ஹெக்டர் பரப்பளவிலும், சிறு தானிய பயிர்கள் 56 ஆயிரத்து 200 ஹெக்டர் பரப்பளவிலும், பயறு வகையில் 50 ஆயிரத்து 600 ஹெக்டரிலும், எண்ணை வித்துக்கள் 24 ஆயிரத்து 400 ஹெக்டர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் நெல் கொள்முதல் வேண்டும் என கோரிக்கை விடுத்தீர்கள். இக்கோரிக்கையை ஏற்று காவேரிப்பட்டணத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகவே விவசாயிகள் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி நல்ல மகசூலை பெறவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு இயற்கை உரங்கள் வழங்கப்பட்டன. இதில், வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மோகன் விஜயகுமார், வேளாண்மை துணை இயக்குனர்கள் ஜக்குல்லா அகண்டராவ், பிரதீப் குமார் சிங், பச்சையப்பன், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.எம்.ராமகவுண்டர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் 21 சிறப்பு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த சிறப்பு பயிற்சி மையங்களில் படிக்கும் சிறுவர்களுக்கு கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் 42 சிறுவர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பிரபாகர், அசோக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். மேலும் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் பிரியா, திட்ட மேலாளர்கள் பாலசந்திரன், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story