மாவட்டத்தில் இறுதி பட்டியல் வெளியீடு: 6 தொகுதிகளில் 15 லட்சத்து 10 ஆயிரத்து 85 வாக்காளர்கள்


மாவட்டத்தில் இறுதி பட்டியல் வெளியீடு: 6 தொகுதிகளில் 15 லட்சத்து 10 ஆயிரத்து 85 வாக்காளர்கள்
x
தினத்தந்தி 31 Jan 2019 10:45 PM GMT (Updated: 31 Jan 2019 5:44 PM GMT)

மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி வெளியிட்டார். அதன்படி 15 லட்சத்து 10 ஆயிரத்து 85 வாக்காளர்கள் உள்ளனர்.

கிருஷ்ணகிரி, 

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 1.1.2019-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி முதல் அக்டோபர் 31-ந் தேதி வரை நடந்தது. இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி நேற்று வெளியிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் படி, புதிதாக 37 ஆயிரத்து 568 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டும், 9 ஆயிரத்து 756 வாக்காளர் நீக்கப்பட்டும், தற்போது இந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இறுதி வாக்காளர் பட்டியல் வாக்காளர் பதிவு அலுவலர், கிருஷ்ணகிரி, ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகங்கள், ஓசூர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், அனைத்து தாசில்தார் அலுவலகங்கள், கிருஷ்ணகிரி, ஓசூர் நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள 1,850 வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பார்த்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, உதவி கலெக்டர்கள் சரவணன், விமல்ராஜ், தேர்தல் பிரிவு தாசில்தார் தணிகாசலம் மற்றும் தாசில்தார்கள், நகராட்சி ஆணையாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் தி.மு.க. விஜய்ராஜசேகர், தங்கராஜ், அ.தி.மு.க. காத்தவராயன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் அன்பரசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நஞ்சுண்டன், பா.ஜனதா கோவிந்தராஜ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சந்திரமோகன், பகுஜன் சமாஜ்வாடி அரிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story