இறுதிப்பட்டியல் வெளியீடு, தேனி நாடாளுமன்ற தொகுதியில் 15¼ லட்சம் வாக்காளர்கள்


இறுதிப்பட்டியல் வெளியீடு, தேனி நாடாளுமன்ற தொகுதியில் 15¼ லட்சம் வாக்காளர்கள்
x
தினத்தந்தி 31 Jan 2019 10:45 PM GMT (Updated: 31 Jan 2019 7:23 PM GMT)

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில், தேனி நாடாளுமன்ற தொகுதியில் 15¼ லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர்.

தேனி,

இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தேனி மாவட்டத்துக்கான பட்டியலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டார். அந்த பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதன், பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஜெயப்பிரீத்தா, தேர்தல் பிரிவு தாசில்தார் ஜஸ்டின் சாந்தப்பா, தேனி தாசில்தார் சத்தியபாமா மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பட்டியலின்படி ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட தேனி மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 52 ஆயிரத்து 681 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 5 லட்சத்து 19 ஆயிரத்து 59 பேரும், பெண்கள் 5 லட்சத்து 33 ஆயிரத்து 459 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 163 பேரும் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட 14 ஆயிரத்து 400 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 43 ஆயிரத்து 966 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். அதன்பின்னர் 1-1-2019-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் நடத்தப்பட்டன. இந்த பணிகள் செப்டம்பர் 1-ந்தேதி முதல் அக்டோபர் 31-ந்தேதி வரை நடந்தது.

இந்த கால கட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பாக மொத்தம் 26 ஆயிரத்து 555 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 26 ஆயிரத்து 129 மனுக்கள் ஏற்கப்பட்டன. அதன்படி புதிய வாக்காளர்களாக 18 ஆயிரத்து 171 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். 4 ஆயிரத்து 6 பேரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 509 பேருக்கு திருத்தப் பணிகளும், 1,443 பேருக்கு முகவரி மாற்றமும் செய்யப்பட்டு உள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து இறுதி பட்டியலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 0.83 சதவீதம் உயர்ந்து உள்ளது. இந்த இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களிலும், ஆர்.ஓ.டி. அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

தேனி நாடாளுமன்ற தொகுதியானது மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இதில், தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளும், மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் (தனி), உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.

இறுதி வாக்காளர் பட்டியலின் படி தேனி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 32 ஆயிரத்து 240 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 7 லட்சத்து 58 ஆயிரத்து 557 பேரும், பெண்கள் 7 லட்சத்து 73 ஆயிரத்து 506 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 177 பேரும் இடம் பெற்றுள்ளனர். ஆண்களை விட 14 ஆயிரத்து 949 பெண்கள் அதிகம் உள்ளனர். 

Next Story