நலவாழ்வு முகாமில் இருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை கோவில் யானைகள் திரும்பின


நலவாழ்வு முகாமில் இருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை கோவில் யானைகள் திரும்பின
x
தினத்தந்தி 1 Feb 2019 4:00 AM IST (Updated: 1 Feb 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

யானைகள் நலவாழ்வு முகாமில் இருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை கோவில் யானைகள் திரும்பி வந்தன.

ஸ்ரீரங்கம்,

இந்து அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் கோவில் மற்றும் மடங்களில் உள்ள யானைகளின் நலவாழ்வு கருதியும், அவை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், அதற்கு புத்துணர்வு அளிப்பதற்காகவும் சிறப்பு நலவாழ்வு முகாமிற்கு யானைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்தாண்டு யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி தொடங்கி 48 நாட்கள் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு திருச்சி மண்டலத்தில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் யானை ஆண்டாள், மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் யானை லட்சுமி, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்கோவில் யானை அகிலா ஆகிய 3 கோவில் யானைகள், லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

முகாம் முடிந்து நேற்று அதிகாலை ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் யானை அகிலா ஆகியவை கோவிலுக்கு திரும்பின. ஸ்ரீரங்கம் கோவிலுக்்கு திரும்பிய யானை ஆண்டாளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர், அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் ஆகியோர் பழங்கள், கரும்பு கொடுத்து வரவேற்றனர்.இதேபோல் திருவானைக்காவல் கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் யானை அகிலாவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது யானை அகிலாவிற்கு, பெண்கள் ஆரத்தி எடுத்து திலகமிட்டனர். நேற்று முதல் யானைகள் கோவில் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. மலைக்கோட்டை கோவில் யானை லட்சுமி நேற்று அதிகாலை 3 மணியளவில் கோவிலுக்கு வந்தது. யானைக்கு கோவில் ஊழியர்கள் வரவேற்பு அளித்தனர். 

Next Story